2016-05-31 15:44:00

வெடிபொருள் கிடங்கில் இறந்த வீரர்களுக்கு கர்தினால் அஞ்சலி


மே,31,2016. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புல்காவ் பகுதியில் உள்ள இராணுவத்தின் மத்திய வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உயிரிழந்த படை வீரர்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். 

இத்தீவிபத்தில் உயிரிழந்த நம் அன்புக்குரிய படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆன்மா நிறைசாந்தியடைவதற்கும், அவர்களின் குடும்பத்தினர், துணிவு, நம்பிக்கை மற்றும் வலிமையுடன் இத்துயரத்தை ஏற்பதற்கும், நாட்டின் நலனுக்காகவும் இறைவனிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ். 

இந்திய இராணுவத்தின் புல்காவ் மத்திய வெடிபொருள் கிடங்கில் இச்செவ்வாய் அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், அதிகாரிகள் இருவர் உட்பட 17 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் பலத்த காயமடைந்தனர். அவ்விடத்திற்கு அருகில் வாழும் கிராமங்களிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புல்காவ் கிடங்கு, இந்திய இராணுவத்தின் வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்படும் கிடங்குகளில், இந்தியாவில் பெரியதும், ஆசியாவிலே இரண்டாவது பெரியதுமாகும், புல்காவ் வெடிபொருள் கிடங்கில் 2010ம் ஆண்டிலும் இதேபோல் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அச்சமயத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.