2016-05-31 16:03:00

இரமதான் புனித மாதம், அமைதி, ஒப்புரவுக்கு ஒரு வாய்ப்பு


மே,31,2016. இரக்கத்தின் யூபிலி ஆண்டும், இரமதான் புனித மாதமும், அமைதி மற்றும் ஒப்புரவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன என்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை முதலாம் இரஃபோல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாத நிறைவை, பாக்தாத் ஜெபமாலை அரசி ஆலயத்தில் பல்சமயத் தலைவர்களுடன் சிறப்பித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், சகிப்புத்தன்மைக் கலாச்சாரத்தைப் பரப்பி, நாட்டின் விழுமியங்களை வலுப்படுத்தி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பல்சமயத்தவருடன் அமைதிக்கான செப வழிபாட்டை தலைமையேற்று நடத்திய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கில் அமைதிக்காகவும் செபித்தார்.

இவ்வழிபாட்டில், சுன்னி, ஷியா, யஜிதிப் பிரிவு முஸ்லிம் தலைவர்கள், சில தூதரக அதிகாரிகள் மற்றும் பிற கிறிஸ்தவத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.