2016-05-30 15:48:00

வாரம் ஓர் அலசல் – நன்மைகள் ஆற்ற பல வழிகள்


மே, 30,2016. அன்பு இதயங்களே, அண்மை ஆண்டுகளாக ஐரோப்பா எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் ஒன்று, அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் பிரச்சனை. கடந்த புதன், வியாழன், வெள்ளி தினங்களில் மட்டும், இத்தாலியின் தெற்கு பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடியேற்றதாரர் மற்றும் அகதிகள், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. கடந்த வாரத்தில் மட்டும், இப்படி ஆபத்தான கடல்பயணம் மேற்கொண்டவர்களில் குறைந்தது 13,000 பேரை, ஐரோப்பிய மீட்புக் கப்பல்கள் காப்பாற்றியுள்ளன. இவ்வாறு ஏற்கனவே காப்பாற்றப்பட்டு, தென் இத்தாலியில் படிக்கும் குடியேற்றதார மற்றும் பல சிறாரில் 400 பேரைக் கடந்த சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை, வறுமை மற்றும் போர் காரணமாக, தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் குடியேற்றதாரர் ஆபத்தாக இல்லை, ஆனால் அவர்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என்று கூறினார். அதோடு நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் சிறாரிடம் கூறினார்.

அன்பு நேயர்களே, சென்னையில், வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்தி வருபவர் ரவி என்கின்ற ரவிச்சந்திரன். கடந்த 25 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் இவர், மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். அண்மையில், தன் தொழில் காரணமாக சென்னைக்கு வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கரதாஸ்(52) என்பவர், ரவியின் ஆட்டோவில் சேப்பாக்கத்தில் ஏறினார். தமிழ் தெரியாத சங்கரதாஸ், இந்தியில், தான் போகவேண்டிய இடத்தைச் சொல்லிக்கொண்டே வந்தபோது, திடீரெனப் பேச்சை நிறுத்தி, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார். உடனே, சிறிதும் தாமதிக்காமல், பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் ரவி. கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது, உடனே இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்னார் மருத்துவர். அங்கேயும் பெரிய மருத்துவர்கள் யாரும் இல்லை என்ற நிலையில், அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு, ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் சென்றார், வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டார், ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக் கொண்டார்.

சங்கரதாசை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்க முடியாது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்தக் கருவி வெளியில்தான் வாங்கவேண்டும் அதுவும் உடனே வாங்கவேண்டும், இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது என்றனர். சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கொல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டபோது, சென்னைக்கு ரயிலில் வரவே, காசில்லாத குடும்பம் அது என்று தெரிந்தது. ரவி சிறிதும் தயங்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார். நண்பர் ஒருவரிடம் நிலைமையைச் சொல்லி 27 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றார். 57 ஆயிரம் ரூபாயை மருத்துவர்களிடம் கொடுத்து, நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர், இந்தாங்க என்னால புரட்ட முடிந்ததுன்னு, 57 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். ஆமாம், சொந்த ஆட்டோவையே அடமானம் வைச்சு இவரைக் காப்பாத்த துடிக்கிறீங்களே? இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா? என மருத்துவர்கள் கேட்க, இவரு யாருன்னு தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னைக் காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்ச சக மனுஷன் அவ்வளவுதான், என்றதும் மருத்துவர்கள் வியந்துபோய், பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து, மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்தனர். இதற்குள் பத்து நாள்களாகிவிட்டன. இந்தப் பத்து நாள்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து, வார்டு வார்டாக கூட்டிச் செல்வது, மருத்துவப் பரிசோனைகளுக்கு உட்படுத்துவது, படுக்க வைப்பது சாப்பிட வைப்பது, நேர நேரத்திற்கு மருந்து கொடுப்பது எனப் பார்த்துக்கொண்டார் ரவி. பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக் கொள்வார், இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டுச் செலவிற்கு கொடுத்துவிடுவார். காலையில் வீட்டில் பால் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துவிடுவார். தாளிக்காத உணவு கொடுக்கவேண்டும் என்பதற்காக மட்டும், ஒட்டல் ஒட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார். இப்படியே இருபது நாள்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாகப் பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும், சென்னையில் மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்றார். காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார் ரவி. பிறகு நல்லபடியாக சங்கரதாசை கொல்கத்தாவிற்கு இரயிலில் அனுப்பி வைத்தார். ஆட்டோ ரவியின் இந்த மனிதாபிமானச் செயலை பின்னர் அறிய வந்த எடிட்டர் மோகன், தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார். இதேபோல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர, அதெல்லாம் வேண்டாம், நான் மனிதனாக என் கடமையைச் செய்தேன், அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றபடி தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ரவி(தினமலர்).

அன்பர்களே, நாம் ஒவ்வொருவரும், தன்னலமின்றி,  கைம்மாறு கருதாமல், பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டியவர்கள். மே 31, இச்செவ்வாய், உலகப் புகையிலை எதிர்ப்பு நாள். புகைப்பதையும், புகையிலைப் பொருள்களைக் கைவிடுவதையும் வலியுறுத்தும் உலக நாள். இவற்றால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் உலக நாள். அன்பு நேயர்களே, நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்ய இந்த நாள் ஒரு வாய்ப்பைத் தருகிறது. எப்படி? புகைப்பதைக் கைவிட்டால், அதைக் கைவிடும் நேரத்திலிருந்து உடல் எப்படியெல்லாம் நலன் பெறுகிறது என எடுத்துரைக்கலாம்.

புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில், இரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் இயல்பு நிலைக்கு வரும். 8 மணி நேரத்தில், இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலிலிருந்து வெளியேறும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும். 2 நாட்களில்,  நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும். 2-12 வார இடைவெளியில், உடலில் மேல்தோலும், இரத்த ஓட்டமும், சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் மேம்படும். நடை எளிதாகும். 1-9 மாத இடைவெளியில், இருமல், சைனஸ் இறுக்கம் தளரும். மூச்சிளைப்பு குறையும். உடல் சக்தி குறிப்பிடத்தக்க அளவு மேம்படும். நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை மேம்படும். நோய்த்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.  புகைப்பிடிக்கும்போது இதயக் கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து, ஓராண்டில் 50 விழுக்காடாகக் குறையும். 5 ஆண்டுகளில் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகை பிடிக்காதவருக்கு உள்ள அளவுக்கே மாறிவிடும். வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிப்பவரைவிட பாதியாகக் குறையும். 10 ஆண்டுகளில்,  புகைப்பிடிக்காதவருக்கு உள்ள சராசரி ஆயுள்காலம் மீண்டும் கிடைக்கும். நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கு உள்ள சாத்தியம் 50 விழுக்காடு குறையும். வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறையும். புற்றுநோயாக மாற வாய்ப்புள்ள செல்கள், இயல்பு செல்களாகப் பதிலிடப்படும். 15 ஆண்டுகளில் இதயக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து, புகை பிடிக்காதவருக்கு இருப்பதைப் போலவே ஆகிவிடும்.

 

புகையிலையைப் பயன்படுத்துவதால், உலகில் ஒவ்வோர் ஆண்டும், அறுபது இலட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் ஆறு இலட்சம் பேர், புகைப்பவர்களின் புகையைச் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்பால் இறப்பவர்கள். இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் 27 கோடியே 50 இலட்சம். எனவே புகைப்பவர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஊட்டலாம். அதேபோல், மதுவின் போதையிலிருந்து மீள்வதற்கும் உதவ முயற்சிக்கலாம். இப்படி உதவுவதால், மதுவுக்கு அடிமையானவர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்திற்கும் நன்மை செய்யலாம். இந்தியாவில் ஏறக்குறைய 75% ஆண்கள், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன (தி இந்து) என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போகும், குடல்புண், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்புக் கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குடிமகன்களில், பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதட்டம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், பாலியல் பிரச்சனை போன்ற மனநலப் பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இதுதவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சனைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். காலம் கடந்தபின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்வாழ்வுதான். எனவே, நேயர்களே, நம்மால் இயன்ற சிறு சிறு நன்மைகளைப் பிறருக்குச் செய்வோம். நன்மைகள் ஆற்ற பல வாய்ப்புகள் நம்மைத் தேடி வருகின்றன. தவறவிடாதிருப்போம்.

அன்பு நிறைந்த இதயமே, உலகின் மிகப்பெரிய எண்ணங்களின் இருப்பிடம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.