2016-05-30 16:33:00

திருத்தந்தை, Scholas Occurrentes உறுப்பினர்கள் சந்திப்பு


மே,30,2016. உலகில் அதிகரித்துவரும் அணு ஆயுதப்பரவல், அச்சுறுத்தலை முன்வைத்துள்ளவேளை, நாம் பாலங்களைக் கட்டியெழுப்புமாறும், அமைதியின் ஆர்வலர்களாகச் செயல்படுமாறும், ‘Scholas Occurrentes’ என்ற அமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு மத மற்றும் கலாச்சாரச் சூழல்களில் வாழும் பள்ளிகளையும், பள்ளிச் சிறாரையும் ஒன்றிணைக்கும், அர்ஜென்டீனாவை மையமாகக் கொண்டியங்கும் உலகளாவிய நிறுவனமான ‘Scholas Occurrentes’ உறுப்பினர்கள், வத்திக்கானில் நடத்திய உலக மாநாட்டின் நிறைவாக, இஞ்ஞாயிறு மாலையில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

கேள்வி-பதில் முறையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சிறார் பல்வேறு கேள்விகளைத் திருத்தந்தையிடம் கேட்டனர். இந்த உலகை வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவது எப்படி எனக் கேட்ட ஒரு சிறுமிக்குப் பதிலளித்த திருத்தந்தை, வன்முறையின் அளவைக் குறைப்பதால் இயலும் என்றார்.

“பல்கலைக்கழகமும் பள்ளியும் : சுவர் அல்லது பாலம்” என்ற தலைப்பில் திருப்பீட அறிவியல் கழகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. மெக்சிகோ நடிகை Salma Hayek, அமெரிக்க ஐக்கிய நாட்டு நடிகர்கள் George Clooney, Richard Gere போன்ற பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளைப் பதிவு செய்வதற்கு உதவியாக, Scholas Occurentes அமைப்பு, askpopefrancis.scholasoccurrentes.org என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, திருத்தந்தையுடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதில் பதிவுசெய்யப்படும் கேள்விகளுக்கான திருத்தந்தையின் பதில்கள், பின்னாளில் புத்தகமாக வெளியிடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.