2016-05-30 16:39:00

சிங்கப்பூர் தலைவர்,திருத்தந்தை சந்திப்பு வரலாற்று நிகழ்வு


மே,30,2016. சிங்கப்பூர் அரசுத்தலைவர் Tony Tan Keng Yam அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்திருப்பது, தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத் தலைநகரமான சிங்கப்பூரில், திருஅவையின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது என்று கூறினார் சிங்கப்பூர் பேராயர் William Goh.

சிங்கப்பூரில் கத்தோலிக்கர் ஏறத்தாழ மூன்று இலட்சத்து எண்பதாயிரம் பேர் என்றும், இவர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர், ஆசிய நாடுகளிலிருந்து சிங்கப்பூரில் வேலைசெய்யும் குடியேற்றதாரர் என்றும் கூறினார் பேராயர் Goh.

சிங்கப்பூரில் கத்தோலிக்கத் திருஅவை உயர்ந்த மதிப்போடு நடத்தப்படுகின்றது மற்றும் அரசின் ஆதரவும் தலத்திருஅவைக்கு உள்ளது என்றும் கூறிய பேராயர் Goh அவர்கள், குடிமக்களின் ஒழுக்கநெறி வாழ்வின் வளர்ச்சியில், மதங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதை, அரசு ஏற்கின்றது என்றும் கூறினார்.

திருப்பீடத்தில், மே 28, கடந்த சனிக்கிழமையன்று சிங்கப்பூர் அரசுத்தலைவர் முதலில் திருத்தந்தை பிரான்சிஸ், பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார். தூய பேதுரு பசிலிக்கா பேராலயம், வத்திக்கான் அருங்காட்சியகம், சிஸ்டீன் சிற்றாலயம் போன்றவற்றையும் பார்வையிட்டார் சிங்கப்பூர் அரசுத்தலைவர் Tony Tan Keng Yam.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.