2016-05-30 15:40:00

இது இரக்கத்தின் காலம் : தண்டனையைவிட அன்பு வெற்றி கொள்கிறது


பெர்சிய அரசர் Chosrores அவர்களின் இராணுவத்தில், திறமையான மற்றும் பரந்த இதயம் படைத்தவர் தளபதி Rustom. இவர், படைவீரர்களால் கடவுளாகவே போற்றப்பட்டார். நாள்கள் செல்லச் செல்ல, தளபதி Rustomக்குத் தலைக்கனம் ஏறியது. ஒருநாள், தன்னை மதித்துக் கவுரவிக்கும் அரசருக்கு எதிராக, ஆட்சிக்கவிழ்ப்பு புரட்சி நடத்தத் திட்டமிட்டார். இத்திட்டம் அரசரின் காதை எட்டியது. அமைச்சரவையைக் கூட்டினார் அரசர். வெகுண்டெழுந்த அமைச்சர்கள், இந்தத் துரோகிக்கு விலங்கு மாட்டி, சிறையில் அடைத்து கடும் தண்டனை அளிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினர். இரவு முழுவதும் சிந்தித்தார் அரசர். காலையில் தளபதியை அழைத்து வரச் சொன்னார். தளபதியைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவருக்குப் புதிய சலுகைகளை வழங்கினார். தளபதிமீது தனக்கிருக்கும் நன்மதிப்பை எடுத்துரைக்கும் விதமாக வேறு பல காரியங்களையும் செய்தார் அரசர். தளபதி அரண்மனையில் சுதந்திரப் பறவையாக வலம்வருவதைக் கண்ட அமைச்சர்கள், அரசரிடம் புகார் செய்தனர். அரசே, அவனைச் சிறையில் அடைக்காமல், இப்படிச் செய்தது நியாயமா என்றனர். அவனுக்கு விலங்கு மாட்டவில்லை என்று யார் சொன்னது, நான் மாட்டியிருக்கும் விலங்குகள் காணக்கூடியவை அல்ல, அவைகளை உங்களால் பார்க்க முடியாது என்றார் அரசர்  Chosrores. ஆம். அரசர், தளபதியின் இதயத்தை விலங்குகளால் மாட்டினார். தண்டனையைவிட அன்பு வெற்றி கொள்கிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.