2016-05-28 15:14:00

ஹிரோஷிமா-71 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்க அரசுத்தலைவர்


மே,28,2016. இரண்டாம் உலகப் போரின்போது அணு ஆயுத தாக்குதல் நடந்த ஹிரோஷிமா நகரின் நினைவிடத்தில், அத்தாக்குதல் நடந்த 71 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் பலியான ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மக்களின் அமைதியான அழுகுரலுக்கு இவ்வெள்ளியன்று அஞ்சலி செலுத்தினார் அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா. மேலும், இத்தாக்குதலில் உயிர் பிழைத்து தற்போது வாழும் முதியோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் அரசுத்தலைவர் ஒபாமா. பாதிக்கப்பட்டவர்கள் ஒபாமாவை ஆரத்தழுவி அழுதனர்.

மேலும், அந்நினைவிடத்தில் உரையாற்றிய ஒபாமா அவர்கள், இதில் உயிரிழந்தோர் ஆன்மாக்கள் சாந்தி பெறட்டும் எனவும், இதுபோன்ற கொடூரச் செயல் இனி நடக்கக் கூடாது எனவும், நாங்களும் அதுபோல் திரும்பவும் செயல்பட மாட்டோம் எனவும், அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும் எனவும் பேசினார்.

உலக வரலாற்றில் அமெரிக்காதான் முதன்முதலாக அணுகுண்டுத் தாக்குதலைத் தொடங்கியது. "லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டைச் சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். ஏறத்தாழ 1 இலட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் உயிரிழந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. இது நடந்து மூன்று நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 9ல், நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை, 2வது முறையாக வீசியது அமெரிக்கா. இந்தத் தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.