2016-05-28 14:52:00

திருத்தந்தையும், சிறார் இரயிலில் வந்த 400 பள்ளிச் சிறாரும்


மே,28,2016. “அலைகளால் அழைத்துவரப்பட்டவர்கள்” என்ற சுலோகத்துடன் ஏறத்தாழ நானூறு இத்தாலிய மற்றும் புலம்பெயர்ந்த பள்ளிச் சிறார், இச்சனிக்கிழமை நண்பகலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்தனர்.

புறவினத்தார் மன்றம் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இத்தாலிய இரயிலகத் துறையின் ஒத்துழைப்புடன், திருப்பீடக் கலாச்சார அவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தென் இத்தாலியின் கலாப்பிரியா மாநிலத்திலிருந்து 400 பள்ளிச் சிறார், தனிப்பட்ட இரயிலில் திருத்தந்தையைப் பார்ப்பதற்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்களை வரவேற்று, கைகளைக் குலுக்கி அவர்களோடு பேசிய திருத்தந்தை, அச்சிறார்க்கு தனது அன்பை வழங்கி, துணிச்சலையும் நம்பிக்கையையும் ஊட்டினார். நைஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்து, ஆபத்தான கடல்பயணத்தை மேற்கொண்டபோது தனது அப்பா, அம்மாவை இழந்த சிறுவன் உட்பட பல புலம்பெயர்ந்த சிறாரும் இக்குழுவில் இருந்தனர்.

நான்காவது ஆண்டாக இடம்பெறும், “சிறாரின் இரயில்” என்ற நிகழ்வில், கடந்த ஆண்டில், தென் இத்தாலியச் சிறைக் கைதிகளின் மகன்களும், மகள்களும், வத்திக்கானுக்கு அழைத்துவரப்பட்டு, திருத்தந்தையைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வு வழியாக, புலம்பெயர்ந்த மற்றும் இத்தாலியச் சிறார், நண்பர்களாக மாறுகின்றனர் என்றும், இச்சிறார் மத்தியில் நல்ல உறவுகள் உருவாகின்றன என்றும் கூறப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.