2016-05-28 15:15:00

அல்பினிச நோயாளர் கொலை அதிகரிப்பு, மலாவி ஆயர் பேரவை


மே,28,2016. தென்கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியில், அல்பினிச நோயாளர்க்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும்வேளை, மந்திரவாதி மருத்துவர்களால் அந்நோயாளர்கள் கொல்லப்படுவது குறித்து தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். 

அல்பினிச நோயாளர்கள், வழிபாட்டுச் சடங்குகளுக்காகக் கடத்தப்பட்டு, கொல்லப்படுகின்றனர் என்றும், புதைகுழிகள் தோண்டப்படுகின்றன என்றும், சிலர் அந்நோயாளரின் எலும்புகளுடனும், உடல் உறுப்புக்களுடனும் காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர் என்றும் கூறினர் மலாவி ஆயர்கள்.

இது குறித்துப் பேசிய, மலாவி ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் Martin Chiphwanya  அவர்கள், அல்பினிச நோயாளர்கள் நல்ல சகுனம் உள்ளவர்கள், அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவர்கள் மற்றும் மாயவித்தை சக்தியைக் கொண்டிருப்பவர்கள் என்று நம்பி, அவர்களைக் கடத்திக் கொலை செய்கின்றனர் என்றார்.

கிழக்கு ஆப்ரிக்காவில், மலாவி, டான்சானியா, புருண்டி ஆகிய நாடுகளிலும், மேற்கு ஆப்ரிக்காவில் காமரூன் நாட்டிலும் அல்பினிச நோயாளர்க்கு இந்நிலை ஏற்படுகின்றது என்றும் கூறினார் Chiphwanya. மலாவியில், பத்தாயிரம் அல்பினிச நோயாளர் உள்ளனர்.

டான்சானியாவில், அல்பினிச உடல் உறுப்புகளுக்கு 50,000 பவுண்டு வரை விலை பேசப்படுவதாகச் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

அல்பினிசம் என்பது, தோலில் இருக்கும் நிறமிப் பகுதி முற்றிலும் அல்லது பகுதியளவு இல்லாமற்போகும் ஒரு மரபியல் நிலையாகும்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.