2016-05-27 15:37:00

திருத்தந்தை, கோஸ்டா ரிக்கா அரசுத்தலைவர் சந்திப்பு


மே,27,2016. கோஸ்டா ரிக்கா அரசுத்தலைவர் Luis Guillermo Solís Rivera அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் அரசுத்தலைவர் Solís Rivera.

கோஸ்டா ரிக்கா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், குறிப்பாக, கல்வி, நலவாழ்வு, பிறரன்பு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவித்தல் ஆகியவைகளில் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்த திருப்தியான எண்ணங்களும் இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டன.

போதைப்பொருள், குடியேற்றதாரர் விவகாரம், இன்னும், தற்போதைய பன்னாட்டு விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மத்திய அமெரிக்க நாடாகிய கோஸ்டா ரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்நாட்டின் ஏறத்தாழ 45 இலட்சம் மக்களில் 25 விழுக்காட்டினர், அந்நாட்டின் தலைநகரும், பெரிய நகரமுமான சான் ஹோசேயில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.