2016-05-27 15:43:00

இயேசுவோடு நிலைத்திருந்து, ஏழைகளுக்குப் பணியாற்றுங்கள்


மே,27,2016. இயேசுவோடு நிலைத்திருந்து, ஏழைகளுக்குப் பணியாற்றுங்கள் என்று, இறைப்பராமரிப்பின் புதல்வர்கள் எனப்படும் தொன் ஓரியோனே சபைப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இச்சபையின் 14வது பொதுப் பேரவையை முன்னிட்டு, இப்பேரவையின் 65 பிரதிநிதிகளுக்கு இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் உரையாற்றிய திருத்தந்தை, இச்சபையை ஆரம்பித்த புனித லூயிஜி ஓரியோனே அவர்களிடமிருந்து பெற்ற, “எல்லாருக்கும் நன்மை செய்யுங்கள், ஒருவருக்கும் துன்பம் தராதீர்கள்” என்ற விருதுவாக்கைக் கொண்டு இச்சபை பணியாற்றுவது குறித்துப் பேசினார்.

சமூக நீதி, கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளால் வழிநடத்தப்பட்டு, தூண்டப்பட்டு, தேவையில் இருப்பவர்க்குப் பணி ஆகியவற்றுக்கு, புனித லூயிஜி ஓரியோனே தன்னை அர்ப்பணித்திருந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.  

உடலுக்கு உணவும், இறைவிசுவாசமும் தேவைப்படும் இன்றைய மனித சமுதாயத்தைச் சந்திப்பதற்கு, உலகின் பாதையில் இயேசுவோடு, அகிலத் திருஅவையும் பயணம் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, "மன்னிப்பைத் தேடுபவர்க்கு, திருஅவை எவ்வாறு அதை வழங்க வேண்டும் என்பதற்கு, அன்னை மரியா எடுத்துக்காட்டாக விளங்குகிறார்" என்ற வார்த்தைகள் இவ்வெள்ளியன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.