2016-05-26 15:13:00

திருத்தந்தையிடம் 6 வயதுச் சிறுமியின் உயிர்க்காப்பு மிதவை


மே,26,2016. “நம் வாழ்வைப் பாதுகாத்துப் பேணும் ஆன்மீக உணவாக, இயேசு, தம்மையே திருநற்கருணையில் நமக்கு வழங்குகிறார்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வியாழனன்று வெளியாயின.

இன்னும், வத்திக்கானில், இவ்வியாழன், இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா. இதையொட்டி, மாலை ஏழு மணிக்கு, உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின்னர், மேரி மேஜர் பசிலிக்கா வரை நடைபெறும் திருநற்கருணை பவனியையும் வழிநடத்தி, மேரி மேஜர் பசிலிக்கா வளாகத்தில் திருநற்கருணை ஆசிரும் வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்த ஆறு வயதுச் சிறுமியின் உயிர்க்காப்பு மிதவை ஆடையை(life jacket), Proactiva Open Arms என்ற அரசு-சாரா குழு, திருத்தந்தையிடம், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் வழங்கியது.

புலம்பெயர்ந்த ஒரு குடும்பம், கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவைப் பாதுகாப்பாகச் சென்றடைய முயற்சித்தபோது, அக்குடும்பமே நீரில் மூழ்கியது. இக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த ஆறு வயதுச் சிறுமி.

Aegean கடலில் மனித உயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தாங்கள், புலம்பெயர்ந்தவர்கள் லெஸ்போஸ் தீவைப் பாதுகாப்பாகச் சென்றடைய உதவுவதாகக் கூறி, நீரில் மூழ்கிய ஆறு வயதுச் சிறுமியின் உயிர்க்காப்பு மிதவை ஆடையை திருத்தந்தையிடம் அளித்தார் அந்தக் குழுவை ஆரம்பித்த Oscar Camps.

இந்தக் குழு பற்றித் தான் அறிந்திருப்பதாகவும், ஒவ்வொரு படகு நிறைய வரும் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு துயரக் கதையை வைத்திருக்கின்றனர் எனவும் திருத்தந்தை தன்னிடம் கூறியதாக ஆஸ்கர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு, ஏறத்தாழ மூவாயிரம் பேருக்கு உதவியுள்ளது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.