2016-05-26 16:02:00

இந்தியாவில் 96 நிமிடத்திற்கு ஒருவர் மதுவால் பலி


மே,26,2016. இந்தியாவில் மதுவால் 96 நிமிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில், நாள் ஒன்றிற்கு 15 பேர் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 விழுக்காடு அதிகரித்திருப்பதாக உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கம் உள்ளது. இருப்பினும், குஜராத் மற்றும் நாகாலாந்தில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அண்மையில், பீஹாரில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற நாளில் கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும் உலக அளவில் இந்தியாவில்தான் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகம் முழுவதும் சராசரியாக மது அருந்தும் 16 விழுக்காட்டினரில், 11 விழுக்காட்டினர் இந்தியாவில் தான் உள்ளனர்.

அண்மையில், சட்டசபை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பூரண மதுவிலக்கிற்கு கேரளாவில் 47 விழுக்காட்டினரும், தமிழகத்தில் 52 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணம் மது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழகம் 3வது இடத்திலும், கர்நாடகா 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன.

மதுவால் மாரடைப்பு மற்றும் நரம்புத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதால் மட்டுமே மது அருந்துவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று, சமூக ஆர்வலர்களும், நலவாழ்வு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.