2016-05-26 13:07:00

இது இரக்கத்தின் காலம் : நல்ல சமாரியர் கல்யாணசுந்தரம்


தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், மேலக்கரிவேலம்குளம் என்ற ஊரில் பிறந்த, பாலம் கல்யாணசுந்தரம் (Palam Kalyanasundaram) அவர்கள், கல்வியறிவற்ற ஏழைகளுக்காக, முப்பது கோடி ரூபாயை வழங்கியிருப்பவர். இவர் இளவயதில் தந்தையை இழந்தார். ஏழைகளுக்குச் சேவைசெய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை இவரது தாய் இவருக்கு ஊட்டினார். நூலகக் கல்வியில் தங்கப் பதக்கம், இன்னும், இலக்கியத்திலும், வரலாற்றியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ஸ்ரீவைகுண்டம் நுண்கலைக் கல்லூரியில், நூலகப் பொறுப்பாளராக இருந்த தனது 35 ஆண்டுகாலப் பணியில், ஒவ்வொரு மாத ஊதியத்தையும், பிறரன்புப் பணிக்காக மனதார வழங்கியவர். அதோடு, தனது அன்றாடத் தேவைகளுக்காக, சிறுசிறு வேலைகளையும் செய்து வந்தார். ஓய்வுபெற்ற பின்னரும், உணவு விடுதிகளில், ஒரு நாளைக்கு இருவேளை சாப்பாட்டிற்காக வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் சிறிது ஊதியத்தையும், கருணை இல்லங்கள் மற்றும் சிறாரின் கல்வி நிதிக்காகச் செலவழித்து வருகிறார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர், ஏழைகளுக்குச் சேவையாற்ற வேண்டுமென்பதற்காகவே திருமணாகாமல் இருக்கிறார். இவரின் தன்னலமற்ற மனிதாபிமானச் சேவையைப் பாராட்டி, 2013ம் ஆண்டில், இவரின் 73வது வயதில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, மில்லென்யம் மனிதர் என்று பாராட்டி, முப்பது கோடி ரூபாயை விருது நிதியாக வழங்கியது. அந்நிதி முழுவதையும், தேவையில் இருப்போருக்காகவே வழங்கி விட்டார். இந்திய அரசு, இந்தியாவில் சிறந்த நூலக மனிதர் என்றும், கேம்பிரிட்ஜ் பன்னாட்டு வாழ்க்கை வரலாறு மையம், உலகின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம், இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவர் என்றும், 2011ம் ஆண்டில், இந்திய ரோட்டரி கிளப், ஆயுள்காலச் சேவையாளர் என்றும் விருதுகள் வழங்கி பாராட்டின. இவர் சென்னையில் சைதாபேட்டையில் சிறிய வீட்டில் வாழ்ந்துவருகிறார்.  ஏழைகள் வாழ்வு நலம்பெறுவதற்காகவே தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் இந்த நல்ல சமாரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நம் பாராட்டுகள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.