2016-05-25 15:54:00

புதன் மறைக்கல்வி : மனம் தளராமல் தொடர்வது, செபத்தின் பண்பு


தமிழகத்தில் இடையிடையே சிறிது மழைபெய்வதும், கோடை வெயில் தீவிரமாகத் தொடர்வதுமாக இருப்பதுபோல், உரோம் நகரிலும் அவ்வப்போது இலேசமாக மழை தூறினாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே வருகின்றது. இருப்பினும் அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், திருப்பயணிகளின் கூட்டம், தூய பேதுரு பேராலய வளாகத்தை நிறைத்திருக்க, இப்புதனன்று காலை, இரக்கத்தின் யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரைத் தொடரின் ஒரு பகுதியாக, 'மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்' என்பதை மையக்கருத்தாகக் கொண்டு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இன்றைய மறைக்கல்விப் போதனையில், ‘நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்’ பற்றிய உவமை குறித்து நோக்குவோம். நேர்மையற்ற ஒரு நடுவரே, தொல்லைத் தாங்காமல் ஏழைக் கைம்பெண்ணுக்கு நீதியை வழங்க முன்வருவதைப் பற்றி நம்மிடம் கூறுவதன் வழியாக,  நாம் முடிவற்ற நீதியும், அன்பும் நிறைந்த இறைத்தந்தையிடம், மனந்தளராமல் செபிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திச் சொல்கிறார் இயேசு. தொடர்ந்து, தன்னை நோக்கிக் கூக்குரலிடும் மக்களுக்கு நீதி வழங்காமல் கடவுள் இருக்கமாட்டார், நமக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார், என்ற உறுதியையும் நமக்குத் தருகிறார் இயேசு, இந்த உவமையின் வழியாக. இயேசுவும் தொடர்ந்து செபித்தார் என்பதை விவிலியம் நமக்குக் காட்டுகிறது. கெத்சமனித் தோட்டத்தில் அவர் ஆழ்ந்து செபித்தது நம் அனைவருக்கும், செபத்தின் ஓர் உயரிய எடுத்துக்காட்டாக உள்ளது. அருள் நிறை இறைவிருப்பத்தில் முழு நம்பிக்கை கொண்டு நம் விண்ணப்பங்களை முன்வைக்க வேண்டும் என, இயேசுவின் இந்த உவமை நமக்குச் சொல்லித் தருகிறது. .''மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என நம்மை நோக்கி கேட்கும் கேள்வியுடன் இந்த, 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற‌ உவமை நிறைவுறுகிறது. மனந்தளராமல் நாம் செபிப்பதன் வழியாக, நம் விசுவாசத்தை, உறுதியுடையதாகவும், உயிர்த்துடிப்புடையதாகவும் வைக்க முடிகிறது. ஏனெனில், செபத்தில் நாம், இறைவனின் கருணையையும் பரிவையும் அனுபவிக்கிறோம். அன்பாலும் இரக்கத்தாலும் எப்போதும் நிறைந்து, தன் மக்களுக்கு எப்போதும் தயாராக இருக்கும் ஒரு தந்தையை நாம் செபத்தில் சந்திக்கிறோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் திங்களன்று சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அம்மக்களுக்காகச் செபிக்குமாறு விண்ணப்பித்தார். இப்புதனன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட 'காணாமல்போன குழந்தைகளுக்கான உலக தினம்’  குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் எல்லாச் சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் நினைவூட்டினார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.