2016-05-25 16:12:00

சிரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்க்கு செபம்


மே,25,2016. சிரியாவில், கடந்த திங்களன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்க்காக, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்கள் இறைவனில் இளைப்பாறுவதற்கும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைப்பதற்கும், இரக்கமுள்ள இறைத்தந்தை மற்றும் அன்னை மரியாவிடம் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

மரணத்தையும், அழிவையும் விதைப்பவர்களின் மனமாற்றத்திற்காகவும் செபிப்போம் என்று சொல்லி, அனைத்துப் பயணிகளுடன் சேர்ந்து அருள்நிறைந்த மரியே என்ற செபத்தையும் செபித்தார் திருத்தந்தை.

சிரியாவில், ஆறாவது ஆண்டாக இடம்பெற்றுவரும் சண்டையில், இதுவரை தாக்குதல்கள் இடம்பெறாமல் இருந்த Jableh, Tartus ஆகிய நகரங்களில், கடந்த திங்களன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 160க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இவர்களின் அடக்கச் சடங்கு, மே 24, இச்செவ்வாயன்று தொடங்கியது.

மேலும், இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவான மே 26, இவ்வியாழன் மாலை 7 மணிக்கு உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் திருப்பலியிலும், அதன் பின்னர் மேரி மேஜர் பசிலிக்கா வரை நடைபெறும் திருநற்கருணைப் பவனியிலும் விசுவாசிகள் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், “அன்பின் ஆயுதங்களோடு, கடவுள், தன்னலத்தையும், மரணத்தையும் வென்றுள்ளார்; அவர் மகன் இயேசுவே, அனைவருக்கும் அகலத் திறக்கப்பட்டுள்ள இரக்கத்தின் கதவு” என்ற வார்த்தைகள் இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.