2016-05-24 15:35:00

திருத்தந்தை : துயருறும் மக்களின் துன்பங்களை அகற்றுங்கள்


மே,24,2016. சண்டை, வன்முறை, அடக்குமுறை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் துன்புறும் இலட்சக்கணக்கான மக்களின் துன்பங்களை அகற்றுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.

175 நாடுகளிலிருந்து, ஏறத்தாழ ஐந்தாயிரம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, வன்முறை, இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களால் துன்புறும் மக்கள், துன்பத்திலும் சுரண்டப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இப்படித் துன்புறும் மற்றும் இவற்றுக்குப் பலியாகியுள்ள இம்மக்களின் அழுகுரல்களைக் கேட்போம், மனித சமுதாயத்தில் பாடம் கற்றுத்தர அவர்களை அனுமதிப்போம், நம் வாழ்வு, அரசியல், பொருளாதாரத் தெரிவுகள், நடத்தைகள் மற்றும் கலாச்சார மேலாண்மை எண்ணங்களை மாற்றுவோம் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்திங்களன்று, இவ்வுலக மாநாட்டில் வழங்கினார்.

துருக்கி நாட்டு இஸ்தான்புல் நகரில், இத்திங்கள், இச்செவ்வாய் தினங்களில் நடைபெற்ற உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில், 57 நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.