2016-05-24 15:29:00

திருத்தந்தை : தூய்மை, விலைக்கு வாங்க முடியாதது


மே,24,2016. துணிச்சலுடன் நம்பிக்கை கொள்பவர்களாகவும், உரையாடலுக்குத் திறந்த மனதுள்ளவராகவும், கடவுளின் அருளைச் சுதந்திரமாக வரவேற்பவர்களாகவும் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.

இவ்வாறு வாழ்வதன் வழியாக, தூய்மையை நோக்கிய நம் பயணத்தில் வெற்றி காண முடியும் என்றும், கிறிஸ்தவர்கள் கடவுளின் பிரச்சன்னத்தில், தயக்கமின்றி நடக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இத்திருப்பலியின் முதல் வாசகத்தில்(1பேது.1,10-16) புனித பேதுரு, தூய்மை வாழ்வுக்கு வழங்கும் ஒரு சிறிய விளக்கத்தை, தனது  மறையுரைக்கு கருவாக எடுத்து உரையாற்றினார்.

தூய்மை ஒரு பயணம், அதனை விலைக்கு வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது, மற்றும் மனித வல்லமையால் பெறவும் முடியாது என்று கூறிய திருத்தந்தை, தூய்மை என்பது, கடவுளின் பிரசன்னத்தில் நடக்கும் பயணமாகும், அதில், ஒருவரின் பெயரில் மற்றவர் நடக்க முடியாது, பிறர் தூயவராக இருப்பதற்கு ஒருவர் செபிக்கலாம், ஆனால் அந்தந்த நபர்தான் அப்பாதையில் நடக்க வேண்டும் என்றும் கூறினார்.

எல்லாக் கிறிஸ்தவர்களும், ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ள எளிமையான தூய்மையை, துணிச்சல், நம்பிக்கை, இறையருள், மனமாற்றம் ஆகிய நான்கு முக்கிய கூறுகளின் உதவியால் பெற இயலும் என்று கூறி, அவற்றை மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் இறையாட்சி, துணிச்சலோடு முன்னோக்கிச் செல்பவர்க்கே உரியது என்றும், துணிச்சல், நம்பிக்கையால் உருவாக்கப்படுகிறது என்றும், இந்தத் துணிச்சல், இயேசுவை சந்திப்பதற்கு நம்பிக்கை கொள்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அருளில், நம்பிக்கை அனைத்தையும் வைக்குமாறு புனித பேதுரு சொல்கிறார் என்றும், நான்காவது கூறாகிய மனமாற்றம், பிறரைப் பற்றி ஒருபோதும் மோசமாகப் பேசாதிருத்தல் போன்ற சிறு சிறு காரியங்களில் இடம்பெற வேண்டும் என்றும் மறையுரையாற்றினார் திருத்தந்தை.

தூய வாழ்வுக்குரிய பாதை மிக எளிதானது, பின்னோக்கிச் செல்லாமல், எப்போதும் துணிச்சலுடன் முன்னோக்கி நடங்கள் என்றும் கூறி, தனது இச்செவ்வாய் திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சகாய அன்னை மரியா விழாவான இச்செவ்வாயன்று, சீனாவின் பாதுகாவலராகிய இவ்வன்னையிடம் அம்மக்களுக்காகவும், சீனாவுடன் நல்லுறவு ஏற்படுத்த திருப்பீடம் எடுத்துவரும் முயற்சிகளுக்காகவும் செபிப்போம் என்றும் இத்திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.