2016-05-24 15:47:00

கர்தினால் தாக்லே:மனிதாபிமான உதவிகளில் மைய இடத்தில் மனிதர்


மே,24,2016. இஸ்தான்புல் முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள், மனிதாபிமான உதவிகளில், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய, குறிப்பாக, தலத்திருஅவைகளிடமிருந்து கிடைத்த அனுபவங்களைப் பார்க்கையில், மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்போது, மனிதரின் நலனில் அக்கறை எடுப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவதாகக் கூறினார் மனிலா கர்தினால் தாக்லே.

புள்ளி விபரங்கள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் கொள்கை அமைப்பாளர்கள் சிந்திக்கக் கூடாது என்றும், இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பிப் பிழைத்தவரின் கையைப் பிடித்துக்கொண்டு, புலம்பெயர்ந்தவர் குடும்பத்திற்குச் சென்று அவர்களின் கதைகளைக் கேட்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

ஒருமைப்பாட்டுணர்வுக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் மக்களை வீடுகளைவிட்டு வெளியேற வைக்கும் போர்களை நிறுத்துவதன் அவசியம் குறித்தும் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், இயற்கை அல்லது மனிதரால் ஏற்படும் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பன்னாட்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும், உள்ளூர் குழுக்களையும் மதிக்க வேண்டும் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.