2016-05-23 14:22:00

திருத்தந்தை, கெய்ரோ அல் அசார் மசூதி தலைவர் சந்திப்பு


மே,23,2016. திருப்பீடத்திற்கும், புகழ்பெற்ற சுன்னிப் பிரிவு முஸ்லிம்களின் கல்வி மையத்திற்கும் இடையே உறவுகள் மேம்படுவதன் அடையாளமாக, கெய்ரோவின் அல்-அசார்(Al-Azhar) மசூதியின் பெரிய தலைவரான அகமது முகமது அல்-தாயிப்(Ahmad Muhammad al-Tayyib) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில், இத்திங்களன்று சந்தித்துப் பேசினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அந்த அவையின் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் இமாம் Ahmad al-Tayyib அவர்களை வரவேற்று திருத்தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.

Ahmad al-Tayyib அவர்களைக் கட்டியணைத்து வரவேற்ற திருத்தந்தை, திருத்தந்தையின் நூலகத்தில், 30 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார். உலக அமைதியில் பெரிய மதங்களின் பங்கு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைப் புறக்கணித்தல், மத்திய கிழக்கில், நெருக்கடியான சூழல்களில் கிறிஸ்தவர்களின் நிலை, அவர்களைப் பாதுகாப்பது போன்ற தலைப்புகள் இச்சந்திப்பில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள்  கூறினார்.

இச்சந்திப்பு முடிந்து, சுற்றுச்சூழல் குறித்த, இறைவா உமக்கே புகழ் (Laudato si') திருமடல், அமைதிப் பதக்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பின்னர், இமாம் Ahmad al-Tayyib அவர்களுடன் வந்திருந்த எட்டுப் பேரையும் சந்தித்தார் திருத்தந்தை. மேலும், இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran, செயலர் ஆயர் Ayuso Guixot ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் இமாம் Ahmad al-Tayyib.

இத்திங்களன்று இச்சந்திப்பை முடித்து பாரிஸ் செல்லும் Ahmed el-Tayyib அவர்கள், கிழக்கு-மேற்கு உறவுகள் குறித்த முஸ்லிம்-கத்தோலிக்க கருத்தரங்கை ஆரம்பித்து வைப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.