2016-05-21 15:04:00

புதிய மறைமாவட்ட சபை ஆரம்பிப்பதற்கு விதிமுறை


மே,21,2016. மறைமாவட்ட ஆயர்கள், ஒரு புதிய மறைமாவட்ட துறவு சபையை ஆரம்பிப்பதற்கு முன்னர், திருப்பீடத்தைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய ஒழுங்குமுறையை வகுத்துள்ளார்.

திருப்பீடத்தைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்பது, அர்ப்பண வாழ்வு வாழும், மறைமாவட்ட துறவு சபையைத் தொடங்குவதற்கு முறையானது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று கூறும் சட்ட விதிமுறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 4ம்தேதி கையெழுத்திட்டார். அது, மே 20, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

மறைமாவட்ட ஆயர்கள், தங்களின் மறைமாவட்டங்களில், அர்ப்பண வாழ்வு வாழும் நிறுவனங்களைத் தொடங்கலாம், அதேசமயம், திருப்பீடத்தோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்று, திருஅவை சட்டத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு கூறுகிறது.

துறவியர் திருப்பேராயத்தின் வேண்டுகோளின்பேரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழியாக, இப்புதிய சட்ட விதிமுறையை அறிவித்துள்ளார்.

இப்புதிய விதிமுறை குறித்து வத்திக்கான் வானொலியில் விளக்கிய, திருப்பீட சட்ட விளக்க அவைச் செயலர் ஆயர் Juan Ignacio Arrieta அவர்கள், மறைமாவட்ட ஆயர்கள் இதற்கு அனுமதி பெற வேண்டியதில்லை, ஆனால், புதிய சபைகளைத் தொடங்குவதற்கு முன்னர், துறவியர் திருப்பேராயத்தில் கலந்துரையாடி, அவர்களின் பதிலைக் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.