2016-05-21 14:50:00

திருத்தந்தை, பெலாருஸ் அரசுத்தலைவர் சந்திப்பு


மே,21,2016. பெலாருஸ் குடியரசுத் தலைவர் Aleksander Lukashenko அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில், இச்சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசினார்.

திருப்பீடத்திலுள்ள Tronetto அறையில், தனக்காகக் காத்திருந்த திருத்தந்தையை, தனது நாட்டு வழக்கப்படி, ஆரத்தழுவி, மூன்றுமுறை முத்தம் கொடுத்து, திருத்தந்தையுடன் இருபது நிமிடங்களுக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்தார் பெலாருஸ் அரசுத்தலைவர் Lukashenko.

இரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் Minsk நகரம், அமைதியின் நகரமாக மாறட்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் பெலாருஸ் அரசுத்தலைவர் Lukashenko.

திருஅவைக்கும், அரசுக்குமிடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே, இன்னும் பிற மதங்களுக்கிடையே நிலவும் நல்லுறவுகள் இடம்பெறுவது குறித்த மகிழ்ச்சி, இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், "நம் பொதுவான மனித சமுதாயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு ஒருவழியாக, நாம் ஒவ்வொருவரும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களிடையே சந்திப்பின் பாலமாக விளங்க முடியும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.