2016-05-21 15:17:00

சமய நிறுவனங்கள்மீது நம்பிக்கை ஊக்குவிக்கப்பட வேண்டும்


மே,21,2016. நெருக்கடி நிலைகளிலுள்ள மக்களுக்கு நாம் ஆற்றும் உதவிகளில், சமய நிறுவனங்கள் உட்பட, உள்ளூர் நிறுவனங்களும் ஈடுபட்டால், நமது உதவி மேலும் பலனுள்ளதாக அமையும் என்று, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் கூறினார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், வருகிற திங்களன்று ஆரம்பிக்கும் 2 நாள், உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில், சமயங்களின் பணி குறித்த சிறப்பு அமர்வில் உரையாற்றவுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், பத்திரிகையாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

சமத்துவமின்மை அதிகரிப்பு, காலநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, நகர்ப்புறம் விரிவடைதல், வளங்களுக்காக மோதல்கள், பயங்கரவாதப் பரவல் ஆகியவை, இலட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் வைத்துள்ளன என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம் என்றும், இவற்றைக் களைவதற்கு மனிதாபிமான அமைப்புமுறை அவசியம் என்றும் மனிலா கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்ட்ரியா, பிரிட்டன், அயர்லாந்து, நெதர்லாந்து, லெபனான், லக்கசம்பர்க், சியெரா லியோன், நைஜர் ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அமைப்புகளும், இஸ்தான்புல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.