2016-05-20 15:35:00

விளையாட்டின் உண்மையான விழுமியங்களைப் பிரிதிபலியுங்கள்


மே,20,2016. விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் மட்டும் வீரர்களாக இல்லாமல், உடன்பிறப்பு உணர்வு, ஒருவரையொருவர் மதித்தல், புரிந்துகொள்தல், மன்னிப்பு போன்ற முக்கிய அறநெறி விழுமியங்களைத் தங்களின் வாழ்வில் வெளிப்படுத்தி, வாழ்விலும் வீரர்களாக விளங்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய கால்பந்து விளையாட்டு அமைப்பின் இரு அணிகளின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த வீரர்கள், தங்களின் இரசிகர்களுக்கு, சிறப்பாக, இளையோர்க்கு, எடுத்துக்காட்டாகத் திகழுமாறு வலியுறுத்தினார்.

விளையாட்டு வீரர்கள், விளையாட்டின் உண்மையான விழுமியங்களை, எப்போதும் தங்களின் வாழ்வில் பிரதிபலிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நல்லிணக்கம், நேர்மை, நட்புறவு, உரையாடல், ஒருமைப்பாட்டுணர்வு போன்ற, மனித மற்றும் அறநெறி மதிப்பீடுகளைப் பரவச் செய்வதிலே ஓர் அணியின் வெற்றி உள்ளது என்றும் கூறினார். வெறும் கால்பந்து விளையாட்டு வீரர்களாக மட்டும் இல்லாமல், முதலில் மனிதர்களாக தங்களின் மனச்சான்றின்படி வாழுமாறும் கூறிய திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும், தனது பணியை ஆற்ற, செபம் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

இத்தாலியின் Juventus மற்றும் AC மிலான் அணிகள், இத்தாலிய கோப்பைக்காக, இவ்வார இறுதியில் உரோம் ஒலிம்பிக் அரங்கத்தில் விளையாடவுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.