2016-05-20 16:23:00

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி


மே,20,2016. இலங்கையில், 'ரோனு' புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, கப்பல்களில் நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது இந்தியா.

கொச்சியில் இருந்து ஐ.என்.எஸ். சுனைனா மற்றும் ஐ.என்.எஸ். சட்லெஜ் கப்பல்கள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்கிறது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ். சட்லெஜ் கப்பல், ஏற்கனவே கொச்சியில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்டு சென்றுவிட்டது என்றும், ஐ.என்.எஸ். சுனைனா விரைவில் புறப்படும் என்றும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வார இறுதி முதல் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டு கொழும்புவிலிருந்து ஏறத்தாழ 2 இலட்சம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். மேலும், நகரமெங்கும் வெள்ள நீர் சூழ்ந்ததோடு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 50 அடிக்கும் கீழ் மக்கள் புதையுண்டனர்.

இதில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது, மேலும் 133 பேரைக் காணவில்லை என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் காரணமாக இந்தியாவில், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.