2016-05-20 15:29:00

திருத்தந்தை:மனிதப் பலவீனங்களைப் புரிந்துகொள்ள வலியுறுத்தல்


மே,20,2016. மனிதப் பலவீனங்களைப் புரிந்துகொள்ளும் அதேவேளை, உண்மையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்காமல் செயல்பட வேண்டும், ஏனென்றால், இறைவனின் முழுமை, ஒப்பீட்டு நிலைகளுக்கு உட்படுத்தப்பட முடியாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, உண்மையோடு பற்றுறுதிகொண்ட இதயத்தைக் கொண்டிருக்கவும், துன்பநிலையிலுள்ள நம் சகோதரர்களைப் புரிந்துகொண்டு, அவர்களோடு  உடன்நடக்கவும் இயேசுவிடம் கற்றுக்கொள்வோம் என்றும் கூறினார்.

விபசாரம் குறித்து, கிறிஸ்து பரிசேயர்களோடு உரையாடும் நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுளின் கண்ணோட்டத்தை, தர்க்க வாதங்களால் குறைப்பதற்கு முயற்சிக்கும் மனிதக் கண்ணோட்டத்தை, இயேசு வெற்றி கொள்கிறார் என்று கூறினார்.

இயேசு மக்களோடு அனுபவிக்கும் செல்வாக்கையும், அவரின் அதிகாரத்தையும் குறைப்பதற்காக, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இயேசுவைச் சிக்க வைக்கும்  நிகழ்வுகள், நற்செய்தியில் ஏராளமாக உள்ளன, இந்நாளைய நற்செய்திப் பகுதியும் இவற்றில் ஒன்று என்று கூறினார் திருத்தந்தை.

கணவன், தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா என்று, பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர், ஆனால், அவர்களின் கண்ணியிலிருந்து தப்பித்து, அக்கேள்வியையும் கடந்து, திருமணத்தின் முழுமை பற்றி இயேசு பேசினார் என்றுரைத்தார் திருத்தந்தை.

ஏழு கணவர்களைக் கொண்டிருந்த ஒரு பெண் பற்றி சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டபோது, உயிர்ப்பின்போது, அந்தப் பெண் யாருடைய மனைவியாகவும் இருக்கமாட்டார், ஏனென்றால், விண்ணகத்தில் திருமணம் நடைபெறுவதில்லை (லூக்.20,35) என்று சொல்லி, இறப்புக்குப் பின்னான திருமணத்தின் நிறைவு பற்றிக் கூறினார் என்றார் திருத்தந்தை.

ஆனால், பரிசேயர்களிடம், படைப்பின் நல்லிணக்கத்தின் முழுமை பற்றிக் குறிப்பிட்டு, கடவுள் மனிதரை, ஆணும் பெண்ணுமாகப் படைத்தார், இருவரும் ஒரே உடலாய் இருப்பர் பெண், கடவுள் இணைத்ததை எந்த மனிதரும் பிரிக்கக் கூடாது என்றார் இயேசு.

திருமணம் குறித்த பரிசேயர் மற்றும் சதுசேயர்களின் கேள்விகளில், இயேசு முழுஉண்மை பற்றிப் பேசுகிறார், இயேசு, உண்மைக்காக வேறு எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றுரைத்த திருத்தந்தை, ஆயினும், இயேசு மிகவும் இரக்கமுள்ளவராய் இருக்கிறார், அவர் ஒருபோதுமே, பாவிகளுக்குக் கதவை அடைப்பதில்லை என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

உண்மை மற்றும் புரிந்துகொள்தலை இயேசு போதிக்கிறார், கற்கள் வீசிக் கொல்லப்படக் கொண்டுவரப்பட்ட பெண்ணிடம், நானும் தீர்ப்பிடேன், போ, இனிமேல் பாவம் செய்யாதே என்று, அப்பெண்ணை இயேசு நடத்திய முறையைப் பார்த்தாலே போதுமானது என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், "மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணம், ஒவ்வொரு மனிதரின் தனித்துவமிக்க மற்றும் உன்னதமான மதிப்பைத் தெரிந்துகொள்வதிலிருந்து மலர்கின்றது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.