2016-05-20 16:10:00

காணாமல்போன அருள்பணியாளர்கள் குறித்த விபரங்கள் தேவை


மே,20,2016. இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையின்போது,  சந்தேகத்துக்குரிய சூழல்களில் காணாமல்போன கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கு நடந்தது என்ன என்பது குறித்து அறிவிக்குமாறு, அரசு அதிகாரிகளைக் கேட்டுள்ளது யாழ்ப்பாண மறைமாவட்டம்.

காணாமல்போயுள்ள அருள்பணியாளர்கள் குறித்த விபரங்களை அறிவிக்குமாறு, நீதிமன்றம் மற்றும் இராணுவத்திடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும், இதுவரை எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை எனவும், யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் அருள்பணி S.V.B. மங்களராசா அவர்கள் கூறினார்.

2006ம் ஆண்டில், பாதுகாப்புப் படைகளின் கடும் கட்டுப்பாட்டிலிருந்த Allaipiddyல் சோதனைச்சாவடியில் காணாமல்போன அருள்பணி ஜிம் ப்ரௌன், இன்னும், இராணுவத்திடம் சரணடைந்த அருள்பணி ஜோசப் பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் அருள்பணி மங்களராசா.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில், 1983ம் ஆண்டு ஆரம்பித்து, 2009ம் ஆண்டு மே 18ம் தேதி அதிகாரப்பூர்வமாக முடிந்த உள்நாட்டுச் சண்டையில் நான்கு கத்தோலிக்க அருள்பணியாளர்கள் காணாமல்போயுள்ளனர் மற்றும் பத்து அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சண்டை முடிந்த கடைசி நாள்களில் மட்டும், குறைந்தது நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. கூறியது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.