2016-05-19 15:10:00

பல்வேறு நாட்டு தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


மே,19,2016. நாடு, மதநம்பிக்கை, கலாச்சாரம் என்பனவற்றின் அடிப்படையில் நாம் வேறுபட்டிருந்தாலும், சமுதாயத்தையும், படைப்பையும் காக்கும் பணியில் நாம் ஒருங்கிணைந்துள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாட்டு தூதர்களுக்கு வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

எஸ்டோனியா, மலாவி, நமீபியா, சேஷெல்ஸ், தாய்லாந்து மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் சார்பில், திருப்பீடத்தில் தூதர்களாகப் பணியாற்ற, புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களை, மே 19, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தூதர்கள் வழியே அந்தந்த நாட்டு மக்களுக்கும், அரசுத் தலைவர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும், செபங்களையும் தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார நெருக்கடிகளாலும், உள்நாட்டு போர்களாலும் மக்கள் சந்தித்துவரும் கடுமையான பிரச்சனைகளைத் தீர்க்க, கருத்தளவில் விவாதங்கள் மேற்கொள்வது மட்டும் போதாது, மாறாக, நாம் உறுதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

மென்மேலும் துண்டுகளாக்கப்பட்டு வரும் மனித குடும்பத்தில், புலம் பெயர்ந்தோரால் உருவாகும் பிரச்சனைகள் சிக்கலாகி வந்தாலும், அந்தப் பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காண்பது அவசியம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

ஆயுத விற்பனையும், மனித வர்த்தகமும், உலகில் பிரச்சனைகளை வளர்த்து, அவற்றால் இலாபம் சேர்க்கின்றன என்பதை உலக நாடுகள் விரைவில் உணர்ந்து, தேவையான தடுப்பு முறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுத் தூதர்களுக்கு வழங்கிய உரையில், ஒரு விண்ணப்பமாக விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.