2016-05-19 14:31:00

திருத்தந்தை: ஏனையோர் உழைப்பை உறுஞ்சுவோர், அட்டைப்பூச்சிகள்


மே,19,2016. பேராசை பிடித்த ஒரு மனிதருடைய அடக்கச் சடங்கில், அவருடைய சவப்பெட்டியை மூட முடியாமல் போனது, ஏனெனில், அவர், சேர்த்து வைத்திருந்த செல்வத்தையெல்லாம் தன்னுடன் கொண்டு செல்ல விரும்பினார் என்ற ஒரு சிறு கதையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை நிறைவேற்றிய திருப்பலியில், செல்வர்களைக் குறித்து திருத்தூதர் யாக்கோபு கூறியுள்ள எச்சரிக்கையை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

ஏனையோரின் உழைப்பை உறுஞ்சி, அவர்களுக்கு தகுந்த ஊதியம் தர மறுக்கும் சுயநலவாதிகள், இரத்தத்தை உறுஞ்சி வாழும் அட்டைப்பூச்சிகளைப் போன்றவர்கள் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

நம்மைச் சூழ்ந்திருக்கும் செல்வங்கள், சங்கிலிகள் போன்றவை, அவற்றால் நாம் பிணைக்கப்பட்டால், இயேசுவைப் பின்தொடர்ந்து செல்ல இயலாது என்று கூறியத் திருத்தந்தை, 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது' என்று இயேசு சொன்னதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

அடிமைத்தனம் இவ்வுலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், இன்றும் உலகின் பல நகரங்களில் மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

அநீதிமான கூலி கொடுத்து, அளவற்ற இலாபம் சேர்க்கும் செல்வந்தர்கள், சாவான பாவம் செய்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, அநீதியால் பாதிக்கபட்டுள்ளவர்களின் குரல் ஆண்டவனை அடையும் என்ற விவிலிய எச்சரிக்கையையும் தன் மறையுரையில் இணைத்தார்.

இப்புதனன்று தான் வழங்கிய மறைகல்வி உரையில் இலாசரைக் குறித்துப் பேசியதை மீண்டும் நினைவுபடுத்திய திருத்தந்தை, இலாசர் பசித்திருந்ததைக் காணாமல், தன் சுயநலத்தில் மூழ்கியிருந்த அந்த செல்வந்தரைவிட, மோசமான சுயலத்தில் வாழும் இன்றைய செல்வந்தர்கள், மற்றவர்கள் பசியை மூலதனமாக்கி, தங்கள் இலாபத்தைப் பெருக்கிக்கொள்வது, சாவான பாவம் என்று எடுத்துரைத்தார்.

மேலும், "நம்பிக்கை நம் உள்ளங்களை மாற்றியுள்ளது என்பதற்கு வெளிப்படையான அடையாளம், நாம் கொள்ளும் அன்பும், மன்னிப்பும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.