2016-05-19 15:07:00

இது இரக்கத்தின் காலம்:மன்னிப்பின் முதல் பலன் மன்னிப்பவருக்கே


மேரி ஜான்சன் அவர்களின் ஒரே மகனான Laramiun Byrdக்கு இருபது வயது நடந்த போது, பதினாறு வயது நிரம்பிய Oshea Israel என்பவரால் தலையில் சுடப்பட்டு இறந்தார். 1993ம் ஆண்டு பிப்ரவரியில் ஒருநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minnesota மாநிலத்தின், Minneapolisல் நடந்த விருந்து ஒன்றில் ஏற்பட்ட விவாதத்தில், இக்கொலை நடந்தது. போதைப்பொருள் மற்றும் குற்றக் கும்பல்களோடு தொடர்புடைய கொலைகாரர் இஸ்ராயேலுக்கு இருபத்தைந்து ஆண்டுகள், ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பதினேழு ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு, இவர் விடுதலை செய்யப்பட்டார். அதோடு, இவர் வாழ்ந்துவந்த பகுதியில், அதுவும், தான் கொலை செய்த இளைஞரின் தாய் வாழும் வீட்டுக்கு அடுத்த வீட்டில், அத்தாயின் அன்பில் நனைந்து வாழ்ந்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம், இவர் கொலைசெய்த அந்த இளைஞரின், 59 வயது நிரம்பிய தாய் மேரி ஜான்சன்தான். பக்தியுள்ள கிறிஸ்தவ ஆசிரியரான மேரி ஜான்சன் இவ்வாறு சொல்லியிருக்கிறார். எனது மகன் கொலை செய்யப்பட்டது, சுனாமி போன்று, திடீர் அதிர்ச்சியைக் கொடுத்தது. வெறுப்பும், கோபமும் மாறி மாறி வந்தன. ஒரு மிருகம் போன்று நடந்துகொண்ட அவன் கூண்டுக்குள் அடைக்கப்பட வேண்டுமென விரும்பினேன். இஸ்ராயேலையும், அவனின் அன்னையையும் வெறுத்தேன். இந்நிலையில், தன்னைப்போல் மகன்களை இழந்த அன்னையரின் ஆலோசனையைத் தேடினேன். பின்னர், Minnesotaவில் Stillwater சிறையில் தண்டனை அனுபவிக்கும் இஸ்ராயேலைச் சந்தித்து, அவனை மன்னித்துவிட்டதாகக் கூற விரும்பினேன். முதலில் எனது விருப்பத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, என்னைப் பார்க்க மறுத்த இஸ்ராயேல், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் ஒத்துக்கொண்டான். பின்னர் எங்கள் சந்திப்புத் தொடர்ந்தது. இப்போது எனது வீட்டிற்கு அருகிலேயே அவனைத் தங்க வைத்துள்ளேன். மன்னிப்பின்மை, புற்றுநோய் போன்றது. அது ஒருவரின் மனநிம்மதியைத் தின்றுகொண்டே இருக்கும். எனது மன்னிப்பு அவன் கொலைகாரன் இல்லை என்பதை மறைத்துவிடாது. ஆனால் மன்னிப்பு என்னைக் குணமாக்குகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.