2016-05-18 15:07:00

வறியோரை மறந்துவிடும் பொருளாதாரத் திட்டங்கள்-கர்தினால் தாக்லே


மே,18,2016. உலகின் பெரும்பாலான பொருளாதார நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் வறியோரை முற்றிலும் மறந்துவிடுவதைக் குறித்து, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என UCAN செய்தி கூறுகிறது.

Centesimus Annus pro Pontifice என்ற அறக்கட்டளை, உரோம் நகரில், அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், பொருளாதார நிபுணர்கள், படைப்பின் பாதுகாவலர்களாக இருப்பதற்குப் பதிலாக, படைப்பின் முதலாளிகளாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

பன்னாட்டுப் பொருளாதார நிறுவனங்கள் அனைத்தும், செல்வம் கொழிக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதால், பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் தங்கி, திட்டங்கள் வகுக்கும் நிபுணர்கள், வறியோரைப் பற்றியப் புரிதலோ, கவலையோ ஏதுமின்றி, திட்டங்கள் தீட்டுகின்றனர் என்று கர்தினால் தாக்லே அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

சுயநலத்தை மையப்படுத்தி, தேவைக்கும் அதிகமாக, செல்வர்கள், இயற்கை சக்திகளை வீணாகப் பயன்படுத்துவதால், வறியோர், மேலும் சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், அனைவருக்கும் அனைத்தையும் உறுதி செய்யும் நீதியே, பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையாக அமையவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.