2016-05-18 14:59:00

கர்தினால் பஞ்ஞாஸ்கோ, அருள் பணியாளராக 50 ஆண்டுகள் நிறைவு


மே,18,2016. "புனித பேதுரு உறங்கிக்கொண்டிருந்த வேளையில், யூதாஸ் விழித்திருந்தான்" என்று இயேசு சபை புனிதர் பீட்டர் கனிசியுஸ் கூறியதை, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், தான் வழங்கிய ஒரு மறையுரையில் குறிப்பிட்டார்.

மே 16ம் தேதி முதல், 19ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் இத்தாலிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, இப்புதன் காலை, 8.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியை தலைமையேற்று நிகழ்த்திய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், அருள் பணியாளராக திருநிலை பெற்று 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, இறைவனுக்கு தன் நன்றியைக் கூறி, தன் மறையுரைத் துவங்கினார்.

மக்களை, தவறான வழிகளில் நடத்திச் செல்ல, உலக சக்திகள் எப்போதும் விழிப்புடன் செயல்படும் வேளையில், ஆயர்களாகிய நாம் மக்களை நல்வழியில் நடத்தும் பணியில், சோர்வடைந்து, உறங்கிவிடக் கூடாது என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் தன் மறையுரையில், உடன் ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இரக்கத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடு, ஒற்றுமை என்பதை வலியுறுத்திய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருஅவைத் தலைவர்கள் நடுவே இந்த ஒற்றுமை இன்னும் ஆழமாக வளர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இத்தாலிய ஆயர் பேரவை மேற்கொண்டுள்ள இந்த ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் மாலை துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.