2016-05-17 13:57:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 22


இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், பல்வேறு நாட்கள், பல்வேறு குழுவினருக்காக ஒதுக்கப்பட்டு, அந்நாட்களில், சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். ஏப்ரல் மாத இறுதியில், (ஏப்ரல் 23-25), வளர் இளம் பருவத்தினரின் யூபிலி நடைபெற்றது. மே மாத இறுதியில் (மே 27-29), தியாக்கோன்கள், ஜூன் மாதத் துவக்கத்தில் (ஜூன் 1-3) அருள்  பணியாளர்கள், ஜூலை மாத இறுதியில் (ஜூலை 27-31) அகில உலக இளையோர் என, பல குழுவினருக்கு யூபிலி நிகழ்வுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

இது, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு என்பதற்கு ஏற்ப, ஒரு சில யூபிலி நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 10 முதல் 12 முடிய, நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனுடையோர் யூபிலியும், செப்டம்பர் 2 முதல் 4 முடிய இரக்கத்தின் பணியாளர்கள் யூபிலியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இரக்கத்தின் பணியாளர்கள் யூபிலியின் ஒரு சிகர நிகழ்வாக, செப்டம்பர் 4ம் தேதி, அருளாளர் அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படுவார்.

இரக்கத்தின் யூபிலியை இன்னும் பொருளுள்ளதாக மாற்ற, நவம்பர் 6ம் தேதி, சிறைக் கைதிகள் யூபிலி சிறப்பிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. யூபிலி ஆண்டின் மையக் கருத்துக்களில் ஒன்று, சிறைப்பட்டோருக்கு விடுதலை என்று விவிலியம் சொல்லித் தருவதற்கு ஏற்ப, சிறைக் கைதிகளின் யூபிலி, இந்த ஆண்டின் முத்தாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மே மாதத் துவக்கத்தில், வத்திக்கானிலிருந்து வெளியான மாற்றொரு செய்தி, இரக்கத்தின் யூபிலியை மேலும் பொருளுள்ளதாக மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பை, அர்த்தமுள்ள, ஓர் ஆனந்த அதிர்ச்சி என்றே நாம் கூற முடியும். நவம்பர் 6ம் தேதி சிறப்பிக்கப்படும் சிறைக் கைதிகள் யூபிலியைத் தொடர்ந்து, நவம்பர் 13, ஞாயிறன்று, யூபிலி ஆண்டின் இறுதி நிகழ்வாக, வீடற்றவரோடு யூபிலி கொண்டாட, திருத்தந்தை நம்மை அழைத்துள்ளார்.

நோயுற்றோர், இரக்கத்தின் பணியாளர்கள், சிறைக் கைதிகள், வீடற்றோர் என்ற இந்த வரிசையில் சேரக்கூடிய மற்றொரு பொருளுள்ள யூபிலி நிகழ்வு, மே மாதம் 5ம் தேதி, வியாழனன்று, வத்திக்கானில் நடைபெற்றது. அதுதான், கண்ணீர் விடுவோரை மையப்படுத்திய யூபிலி நிகழ்வு. "கண்ணீரைத் துடையுங்கள்" என்ற மையக் கருத்துடன் மே 5, மாலை 6 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருவிழிப்பு வழிபாடு ஒன்று நடைபெற்றது.

"உலகெங்கும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஒவ்வொரு நாளும் சிந்தும் கண்ணீர், இரக்கத்திற்காக, பரிவுக்காக, நிம்மதிக்காக கதறி அழுகின்றது. இதில், மிகக் கசப்பானக் கண்ணீருக்குக் காரணம், மனிதத் தீமை" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வழிபாட்டின்போது வழங்கிய மறையுரையில் கூறினார். திருத்தந்தையின் மறையுரைக்கு முன்னர், பேராலயத்தில் கூடியிருந்தோர், மூன்று சாட்சியப் பகிர்வுகளுக்குச் செவி மடுத்தனர்.

பெல்லெக்ரினோ (Pellegrino) என்ற பெயர் கொண்ட இத்தாலியக் குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தின் மூத்த மகன் அந்தோனியோ தன் 15வது வயதில் தற்கொலை செய்துகொண்டதால் தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தையும், அதைத் தாண்டி வர, இறைவன் தங்களுக்கு அளித்த அருளையும் குறித்து பகிர்ந்துகொண்டனர். "என் மகன் அந்தோனியோ, கல்லறைக்குச் சென்றபோது, என் வாழ்வு, சிந்தனை, ஆன்மா அனைத்தையும் அவனுடன் சேர்த்து, கல்லறைக்கு இழுத்துச் சென்றான்" என்று, அந்தோனியோவின் அன்னை, ஜியோவான்னா (Giovanna) அவர்கள் கூறினார். "இறைவன், என் கண்ணீரைத் துடைக்கிறார் என்ற நம்பிக்கை மட்டுமே, நான் இதுவரை மதியிழந்து போகாமல் என்னைக் காத்து வருகிறது" என்று அந்த அன்னை தன் பகிர்வை நிறைவு செய்தார்.

இரட்டைப் பிறவியரான மவுரீசியோ (Maurizio), என்சோ (Enzo) என்ற இரு சகோதரர்கள், மிகுந்த செல்வத்தில் வாழ்ந்ததால், நெறியிழந்து சென்றதைப் பற்றிக் கூறினர். தங்கள் தாயின் கண்ணீர், தங்களை மீண்டும் இறைவனிடம் கொணர்ந்தது என்று சாட்சியம் பகர்ந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து தன் குடும்பத்தோடு தப்பித்து, இத்தாலியில் குடியேறியுள்ள பீலிக்ஸ் கைசர் (Felix Qaiser) என்ற பத்திரிகையாளர், கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்தால் தானும், தன் குடும்பமும் அடைந்த இன்னல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இப்பகிர்வுகளைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சிந்தனைகளை வழங்கினார். அவரது மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

"நம் துயரங்கள், நோய் ஆகியவற்றின் நடுவில், ஆறுதலைத் தேடுகிறோம். நமக்கு ஆறுதலாக, உறுதுணையாக யாராவது இருக்கவேண்டும் என்பதை ஆழமாக உணர்கிறோம். துயரங்களின் நடுவே, நமது சிந்தனைகள் கேள்விகளால் நிறைந்து விடுகின்றன. இக்கேள்விகளுக்குரிய பதில்கள் இதயத்திலிருந்து வரவேண்டும். அவையே, துயரம் என்ற மறையுண்மையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

துயரத்தில் நாம் தனித்து விடப்படுவதில்லை. தன் நண்பர் இலாசரை இழந்ததால் கண்ணீர் வடித்த (காண்க- யோவான் 11: 33-35) இயேசு, நம்மருகில் உள்ளார். இயேசுவின் கண்ணீர், பல இறையியல் சிந்தனையாளர்களைத் தடுமாறச் செய்துள்ளது. அதே வேளையில், கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, காயப்பட்டு, துன்புற்ற பல்லாயிரம் புனித இதயங்களுக்கு ஆறுதலாகவும் இருந்துள்ளது. கடவுளால் கண்ணீர் விடமுடியும் என்றால், என் கண்ணீரையும் அவர் புரிந்துகொள்வார் என்ற உறுதியில், என்னாலும் கண்ணீர் விடமுடியும்.

அடுத்தவர் துயர் கண்டு அக்கறையின்றி இருக்கும் நோய்க்கு ஓர் அருமருந்தாக, இயேசுவின் கண்ணீர் அமைகிறது. இலாசரின் கல்லறைக்கு முன் நின்று, தன் துயரம், குழப்பம், கண்ணீர் இவற்றின் நடுவே, இயேசு, தன் தந்தையிடம் செபித்தார் (யோவான் 11: 41-42)" என்று தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை.

இவ்வழிபாட்டின்போது நிகழ்ந்த மற்றோர் அழகிய நிகழ்வு நம் கவனத்தை ஈர்க்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு, 'இறைவனின் செம்மறி' என்ற அடையாள உருவம் வழங்கப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவையின் பாரம்பரியத்தில், 9ம் நூற்றாண்டிலிருந்து நிலவிவரும் ஓர் அடையாள உருவம், 'இறைவனின் செம்மறி'. உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புச் சடங்கில் பயன்படுத்தப்படும் பாஸ்காத் திரி, இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவையொட்டி, உருக்கப்பட்டு, அந்த மெழுகிலிருந்து வடிவமைக்கப்படும் "இறைவனின் செம்மறி" என்ற அடையாள உருவம், மக்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. 1470ம் ஆண்டு முதல், திருத்தந்தை 2ம் பவுல் அவர்கள், 'இறைவனின் செம்மறி' என்ற உருவத்தை யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக அறிமுகப்படுத்தினார். இந்தப் பாரம்பரியத்தின் நினைவாக, 'இறைவனின் செம்மறி' என்ற அடையாள உருவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 10 பேருக்கு வழங்கினார்.

தங்கள் துயரங்களால் நொறுங்கிப் போனாலும், இறைவனின் கருணையால், அந்நிலையிலிருந்து மீண்டு, நொறுங்கிப்போன அயலவருக்கு உதவும் வண்ணம் தங்கள் வாழ்வை வடிவமைத்துள்ள பத்து பேருக்கு 'இறைவனின் செம்மறி' அடையாள உருவம் வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார் விபத்தில் தங்கள் சிறு மகனை இழந்த பின்னர், 'விண்ணகத்தில் குழந்தைகள்' என்ற அமைப்பை உருவாக்கி, சிறுவயதில் தங்கள் குழந்தைகளை இழந்தோருக்கு உதவி வரும் பெற்றோர், 1994ம் ஆண்டு, ருவாண்டா நாட்டில் நிகழ்ந்த இனப்படுகொலையில், தன் குடும்பத்தினர் பலரை இழந்தாலும், தற்போது அருள் பணியாளராக தன்னை தயாரித்துவரும் ஒரு தியாக்கொன், 'மாபியா' கும்பலில் சிக்கி, மீண்டுவந்துள்ள ஓர் இளையவர், தீராத நோயினால் மரணத்தை எதிநோக்கியிருக்கும் நோயாளிகளுக்குப் பணியாற்றும் ஒரு பெண் ஆகியோர் இந்த பத்துபேரில் ஒரு சிலர். உலகின் பாவங்களையும், உலகின் துயரங்களையும் தன் மீது சுமந்த 'இறைவனின் செம்மறி'யை, இவர்கள் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை வழங்கினார்.

இந்த திருவிழிப்பு வழிபாட்டின் மற்றுமொரு சிறப்பு அம்சமாக, இத்தாலியின் Syracuse நகரில் வணங்கப்படும் ‘கண்ணீர் விடும் அன்னை மரியா’வின் உருவம், மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டது. இத்தாலியின் சிசிலித் தீவில் அமைந்துள்ள Syracuse நகரில் வாழ்ந்த தொழிலாளரான Angelo Iannuso என்பவரின் மனைவி Antonia அவர்கள் கருவுற்றிருந்த காலத்தில், திடீரென, பார்வைத் திறனை இழந்து வந்தார். 1953ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இரவு, Antonia அவர்கள் படுத்திருந்த படுக்கைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் படத்திலிருந்து கண்ணீர் வழிந்து, Antonia அவர்கள் கண்கள் மீது, விழவே, அவர் மீண்டும் பார்வை பெற்றார். இதையடுத்து, கண்ணீர் விடும் அன்னை மரியாவின் உருவம், பல புதுமைகளுக்குக் காரணமாக அமைந்தது. இப்புதுமைகளின் காரணமாக புகழ்பெற்ற ‘கண்ணீர் விடும் அன்னை மரியா’வின் திரு உருவம், மே 5, நடைபெற்ற "கண்ணீரைத் துடையுங்கள்" வழிபாட்டில், மக்கள் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்தது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் ஒரு பகுதியாக, துயரம் நிறைந்த பலரது உள்ளங்களுக்கு ஆறுதலாக நடைபெற்ற 'கண்ணீரைத் துடையுங்கள்' வழிபாட்டினால் பலரும் மன உறுதி பெற்று திரும்பியிருப்பர் என்பதை நம்பலாம். இந்த வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் இறுதியில் அவர் கூறிய சொற்களுடன், நம் தேடலை இன்று நிறைவு செய்வோம்:

"ஒவ்வொரு சிலுவையின் அடியிலும் இயேசுவின் தாய் எப்போதும் நிற்கிறார். தன் மேலாடையைக் கொண்டு, அவர் நம் கண்ணீரைத் துடைக்கிறார். அவரது நீட்டியக் கரங்களைக் கொண்டு, நாம் எழுந்து நிற்க உதவி செய்கிறார். நம்பிக்கையின் பாதையில் நம்முடன் வழி நடக்கிறார்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.