2016-05-17 16:10:00

தற்கொலைத் தாக்குதலுக்கு 5ல் ஒருவர் சிறார்


மே,17,2016. போக்கோ ஹாரம் இஸ்லாம் தீவிரவாத அமைப்பால், தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் சிறாரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது என, ஐ.நா. மனிதாபிமான அலுவலகம் கூறியது.

போக்கோ ஹாரம் அமைப்பு, சாட் ஏரி பகுதியில், அப்பாவி குடிமக்கள் மற்றும் இராணுவத்தின்மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது எனவும், அப்பகுதியில் சண்டையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில், பாதுகாப்பு மிகவும் கடினமானதாக உள்ளது எனவும், ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பாளர் அலுவலகமான OCHA கூறியது.

நைஜீரியாவின் வட கிழக்கிலுள்ள போர்னோவில், ஏறத்தாழ 4,86,000 மற்றும் யோபேயில் 2,42,000 என, சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்றும், அந்த இடங்களில், 2 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 73 ஆயிரம் குழந்தைகளுக்கு, உடனடி ஊட்டச்சத்து உணவு தேவைப்படுகின்றது எனவும் OCHA கூறியது.

2015ம் ஆண்டில், 44 சிறார், தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டனர், இவர்களில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் சிறுமிகள் எனவும், OCHA மேலும் கூறியது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.