2016-05-16 17:09:00

திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை


மே,16,2016. இறைவன் மீதும், நம் அயலவர் மீதும் நாம் கொண்டிருக்கும் அன்பு, வார்த்தைகளால் அல்ல, மாறாக, செயல்களால் நிரூபிக்கப்பட வேண்டும் என்று, தன் அல்லேலூயா வாழ்த்தொலி செப உரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவராயிருத்தல் என்பது, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைச் சார்ந்திருப்பதோ, அல்லது, ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதோ அல்ல, மாறாக, அனைத்து நிலைகளிலும் இயேசுவோடு தன்னை இணைத்து, அவர் வழியாக, தந்தையில் இணைவதாகும் என்று, தூய ஆவியாரின் பெருவிழா ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியத் திருத்தந்தை கூறினார்.

நீங்கள் என்னை அன்புகூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், உங்களோடு என்றும் தங்கியிருக்கும் துணையாளரை தந்தை அனுப்புவார் என்று இயேசு கூறிய வார்த்தைகள், இறைவனிடமும், அயலவரிடமும் நாம் காட்டும் அன்பு, வார்த்தைகளால் அல்ல, மாறாக, செயல்களால் காட்டப்படவேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றன என்று கூறினார் திருத்தந்தை.

நம் வாழ்வில் தீமைக்கெதிராகவும், நன்மையின் சார்பாகவும் நாம் மேற்கொள்ளும் போராட்டத்தில், நம் துணையாளராகவும், ஆறுதல் தருபவராகவும், பரிந்து பேசுபவராகவும் செயல்படுபவர், தூய ஆவியாரே என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் படிப்பினைகளை நமக்கு மீண்டும் நினைவுறுத்தி, அவற்றை நம்மில் ஒரு பகுதியாக மாற்றுபவரும் தூய ஆவியாரே என்று மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.