2016-05-16 17:15:00

கிறிஸ்தவராய் இருப்பது, வாழ்வால் சாட்சியம் பகர்வது


மே,16,2016. பாவம், நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்தாலும், நாம் அநாதைகளாக விடப்படவில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார்.  

தூய ஆவியாரின் கொடையில் நிறைவடைந்த இயேசுவின் மறைப்பணியின் மையம், பாவத்தால் பாதிக்கப்பட்ட நம் உறவு, இறைத்தந்தையுடன் மீண்டும் புதுப்பிக்கப்படவும், கைவிடப்பட்ட குழந்தைகளாக நாம் வாழும் நிலையிலிருந்து நம்மை விடுவிக்கவும், இறைத்தந்தையின் குழந்தைகளாக மீண்டும் நம்மை ஆக்குவதற்குமே என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் கடவுளின் குழந்தைகளாக ஆக்கப்பட்டிருப்பது, நம் DNA மரபணுவிலேயே உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இறைத்தந்தையால் நமக்கு வழங்கப்பட்ட தூய ஆவியார், நம்மை இறைத்தந்தையிடமே மீண்டும் இட்டுச் செல்கிறார் என்றும் கூறினார்.

நாம் நம் ஆண்டவரோடு ஒப்புரவாகி, அவரின் குழந்தைகளாகத் தொடர்ந்து நம்மால் வாழ இயலும், இதற்கு, இயேசு கிறிஸ்துவுக்கும், தூய ஆவியாரின் கொடைக்கும் நன்றி சொல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலிலிருந்து மேற்கோள்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் எல்லாரும், இறைவனின் குழந்தைகள் என்றும், அச்சத்தில் வீழ்வதற்காக அடிமையின் ஆவியை நாம் பெறவில்லை, மாறாக, மகனுக்குரிய நிலைமையின் ஆவியைப் பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.

நம்மைச் சுற்றி மக்கள் வாழ்ந்தாலும், நம் மனதில் தனிமையை உணர்கிறோம், இந்தத் தனிமை, ஆன்மீக அறிவின்மை, நம்முடன் வாழ்வோரை உடன்பிறந்தோராக நோக்காமை உட்பட, அநாதைகளாக வாழ்கின்ற பல்வேறு அடையாளங்களை இன்று நாம் பார்க்கிறோம், இந்தத் தனிமை, வாழ்வதன் பொருளையே கேள்வி கேட்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, இந்தத் தனிமை, இறைவனிடமிருந்து பிரிந்து வாழ முயற்சிக்கும் அடையாளமாகவும் உள்ளது என்றார். 

இயேசுவின் தாயாகிய மரியா, திருஅவையின் தாய், எல்லாக் கிறிஸ்தவர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குத் தேவைப்படும் தூய ஆவியாரை மரியா நமக்குப் பெற்றுத் தருவாராக என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.