2016-05-16 16:57:00

ஈராக்கில் சகிப்புத்தன்மை கலாச்சாரம் உருவாக்கப்பட அழைப்பு


மே,16,2016. ஈராக்கில் தினமும் இடம்பெற்றுவரும் வன்முறைகளைக் களையும் நோக்கில், அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க, அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் ரஃபேல் சாக்கோ.

ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகள் அண்மையில், ஈராக்கின் பாக்தாத்திலுள்ள எரிவாயு தொழிற்சாலையில் தற்கொலைத் தாக்குதலை நடத்தி 14 பேரின் உயிரிழப்புக்கும் 20 பேர் படுகாயமுறுதலுக்கும் காரணமாகியுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ அவர்கள், தொடர்ந்துவரும் தாக்குதல்கள், ஈராக் நாட்டின் கலாச்சாரப் பிணைப்பையும், ஒன்றிணைந்த வாழ்வையும் பெருமளவில் அச்சுறுத்தி வருகின்றன என்றார்.

அப்பாவி பொதுமக்களின் வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில், அரசியல் தலைவர்களும், நல்மனம் கொண்டோரும் துணிவுடன் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் கல்தேய ரீதி முதுபெரும் தந்தை சாக்கோ.

அடிப்படைவாதங்களையும், பிரிவினைப் போக்குகளையும் கைவிட்டு, அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.