2016-05-16 17:03:00

HIV பாதிக்கப்பட்ட குழந்தைகள் சார்பாக கர்தினால் டர்க்சன்


மே,16,2016. இன்றைய உலகில் HIV நோய்க் கிருமியின் பாதிப்புக்களால் துன்புறும் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சை முறைகள், பொருளாதாரச் சந்தையின் அறிவாற்றலைக் கொண்டு அல்ல, மாறாக, இதயத்தின் நுண்மதிகொண்டு அணுகப்படவேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்தார்.

HIV நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சை முறைகள் குறித்து, திருப்பீட நீதி, அமைதி அவை, இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் திருப்பீடத்தில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில், இவ்வவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வரவேற்புரை வழங்கிய வேளையில் இவ்வாறு கூறினார்.

HIV நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் குடும்பங்களுக்கும், அக்குழந்தைகளைப் பராமரிப்பவர்களுக்கும் ஆதரவும், உதவியும் வழங்கப்படவேண்டிய கடமைகளைக் குறித்து கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

HIV நோய் கண்ட குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ உதவிகள் எளிதாகக் கிடைக்க வழிவகைச் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய கர்தினால் டர்க்சன் அவர்கள், சில நாடுகளில், உள்ளூர் சமூகங்களில், இந்நோய் குறித்து நிலவும் தவறான எண்ணங்களும், அணுகு முறைகளும் அகற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலகின் பல பகுதிகளில், குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளில், குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்த கர்தினால் டர்க்சன் அவர்கள், மலேரியா, காசநோய் போன்றவற்றை ஒழிப்பதற்குத் தேவையான முயற்சிகளில், அரசியல் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.