2016-05-13 16:38:00

திருஅவையில் பெண் தியாக்கோன்கள் குறித்து ஆராய்வதற்கு


மே,13,2016. கத்தோலிக்கத் திருஅவையில், பெண் தியாக்கோன்களை மீண்டும் நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக, ஒரு குழுவை அமைப்பதற்குத் தான் விரும்புவதாக, திருஅவையில் பெண்களின் பங்கு குறித்த ஒரு நீண்ட கலந்துரையாடலில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ தொள்ளாயிரம் பெண் துறவு சபைத் தலைவர்களை, இவ்வியாழனன்று, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து, துறவு வாழ்வில் பெண்களின் மறைப்பணியும், திருப்பணியும் பற்றி, அத்தலைவர்களுடன், ஒன்றரை மணி நேரம் நடத்திய நீண்ட கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

பெண் தியாக்கோன்களின் வரலாறு உட்பட, பல்வேறு சிக்கலான கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை, தொடக்ககாலத் திருஅவையில் பெண்களின் பங்கு குறித்த புரிதல் தெளிவில்லாமல் இருக்கின்றது என்றும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு, ஒரு குழு அமைப்பது பயனுள்ளதாக அமையும் என்றும் கூறினார்.

திருஅவையில் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் பெண்களின் பங்கு அதிகரிப்பதைத் தான் பார்க்க விரும்புவதாகவும், தீர்மானங்கள் எடுக்கவும், அவற்றைச் செயல்படுத்தவும், பெண்களின் பங்கு மிகவும் முக்கியம் எனவும் கூறினார் திருத்தந்தை.

திருப்பலியில் பெண்கள் மறையுரையாற்றுவது குறித்த வாய்ப்புகள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அர்ப்பண வாழ்வு வாழ்வோரோ அல்லது பொதுநிலைப் பெண்களோ மறையுரையாற்றக்கூடிய, பிற திருவழிபாடுகளைப் பிரித்துப் பார்ப்பது முக்கியம், ஆனால், திருப்பலியில் ஆற்றப்படும் மறையுரை, அருள்பணியாளரின் பங்கோடு தொடர்புடையது எனவும் கூறினார்.

பல பெண் துறவு சபைகள் மேற்கொண்டுள்ள சீர்திருத்த முறைகளை எளிதாக்குவதற்கான திருஅவைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது பற்றிக் கேட்டபோது, இத்தகைய மாற்றங்கள் இயலக்கூடியதே, ஆயினும், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் இவை ஆராய்ந்து, தேர்ந்து தெளியப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களைப் பராமரித்துவரும் அருள்சகோதரிகளின் முக்கிய பணி பற்றியும் பேசிய திருத்தந்தை, இது திருஅவைக்குச் சேவையாற்றும் அழைப்பாகும் என்றும் கூறினார்.

UISG என்ற உலக பெண் துறவு சபைத் தலைவர்கள் அமைப்பு, உரோம் நகரில் நடத்திய ஐந்து நாள் மாநாட்டில், உலகின் ஏறத்தாழ ஐந்து இலட்சம் அருள்சகோதரிகளின் பிரதிநிதிகளாக, ஏறத்தாழ தொள்ளாயிரம் பெண் துறவு சபைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாடு இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.