2016-05-13 16:45:00

அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் நாள்


மே,13,2016. வருகிற செப்டம்பர் 4ம் தேதி, காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், அருளாளர் அன்னை தெரேசாவைப் புனிதர் என அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் 4ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் மற்றும் பிற விபரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.

இயேசுவின் திருஇதய விழாவான ஜூன் 3ம் தேதி, காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் வளாகத்தில் அருள்பணியாளர்களுக்கு யூபிலித் திருப்பலி, ஜூன் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் வளாகத்தில், அருளாளர்கள் Stanislao di Gesù Maria, Maria Elisabetta Hesselblad ஆகிய இருவரையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலி, 12ம் தேதி, காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் வளாகத்தில், நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் திருப்பலி, ஜூன் 20ம் தேதி சில புனிதர்கள் குறித்த கர்தினால்கள் அவை, 24 முதல் 26 ஆர்மேனியாவுக்குத் திருத்தூதுப் பயணம், 29ம் தேதி புதிய பேராயர்களுக்குப் பால்யம் வழங்குதல் ஆகியவை திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்.

31ம் உலக இளையோர் தினத்தை முன்னிட்டு, ஜூலை 27 முதல் 31 வரை போலந்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.         

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.