2016-05-12 14:47:00

இலக்சம்பர்க் நகர மக்களுக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி


மே,12,2016. துயருறுவோரின் ஆறுதலான அன்னை மரியாவின் 350ம் ஆண்டு நிறைவு, நாம் சிறப்பித்துவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இடம்பெறுவதை, இறைவனின் திட்டமாகக் கருதலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலக்சம்பர்க் நகர (Luxembourg) மக்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

துயருறுவோரின் ஆறுதலான அன்னை மரியா, 1666ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, இலக்சம்பர்க் நகரின் பாதுகாவலராக, அர்ப்பணிக்கப்பட்டார். இந்த நிகழ்வின் 350வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், மே மாதம் 8ம் தேதி முதல், அக்டோபர் மாதம் முடிய நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, இலக்சம்பர்க் பேராயர், Jean-Claude Hollerich அவர்கள் வழியே, அந்நகர மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், நிம்மதியையும், நிறைவையும் தரும் இந்த யூபிலி, நமது மீட்பைக் குறித்த நம்பிக்கையை வளர்ப்பதாக என்று கூறியுள்ளார்.

15ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, துயருறுவோரின் ஆறுதலான அன்னை மரியாவின் திருஉருவம், இலக்சம்பர்க் நகரெங்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும், குறிப்பாக, அன்னையின் உருவம் வணங்கப்படும் பேராலயத்திற்கு வரமுடியாத நோயுற்றோர், மற்றும் வயது முதிர்ந்தோர் வாழும் பகுதிகளுக்கு இந்த உருவம் எடுத்துச் செல்லப்படும் என்றும் பேராயர் Hollerich அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.