2016-05-11 15:39:00

புதன் மறைக்கல்வி உரை : முன்நிபந்தனையற்ற அன்பும் மன்னிப்பும்


மே,11,2016. உரோம் நகரில் கோடைக்காலம் துவங்கியபின், மிக மெதுவாகத்தான் வெப்பம் வரத் துவங்கியது. இரண்டு நாள்களே வெயில் அடித்த நிலையில், புதன் அதிகாலையில் மழை தூறத் துவங்கியது. இப்புதன் மறைக்கல்வி உரையை இந்த மழை பாதிக்குமோ என அஞ்சிக்கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்திலேயே மழை நின்றுவிட, இதமான வெயிலும் துணை நிற்க, தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. பத்து மணிக்கு துவங்கவிருந்த மறைக்கல்வி உரைக்கென, மக்கள் கூட்டம், எட்டு மணிக்கெல்லாம் வரத்துவங்க, ஒன்பது மணிக்கு, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் மண்டபத்தின் உள் அரங்கில்,  சூஃபி குழுமத்தின் சகோதரத்துவ அமைப்பின் பெக்டாஷி (bektashi) இஸ்லாமியப் பிரிவுத் தலைவர் பாபா எட்மண்ட் பிராகிமாஜ் (Baba Edmond Brahimaj) அவர்களைத் தனியாகச் சந்தித்து உரையாடினார். உலகின் 31 நாடுகளில் பல இலட்சம் மக்களைக் கொண்டுள்ள இந்த பெக்டாஷி இஸ்லாமியப் பிரிவினர், அல்பேனியாவின் 30 இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு விழுக்காட்டினராவர். பெக்டாஷி இஸ்லாமியப் பிரிவின் தலைவர் பாபா எட்மண்ட் பிராகிமாஜ் அவர்களைச் சந்தித்து உரையாடியபின், அதே அரங்கில் சில நோயுற்றோரையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'வெளியே சிறிதாக மழை தூறலாம் என்ற அச்சமிருப்பதால், உங்களை இந்த அரங்கில் தனியாக அமர வைத்துள்ளனர். இங்குள்ள பெரிய திரையில், மறைக்கல்வி உரையைக் கண்டு செவிமடுங்கள், எனக்காகச் செபிக்க மறந்து விடாதீர்கள்' என, அங்கு குழுமியிருந்த நோயாளிகளிடம் விண்ணப்பம் ஒன்றையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு, தன் ஆசீரையும் அளித்தார்.

அருளாளர் ஆறாம் பவுல் அரங்கிலிருந்து தூய பேதுரு வளாகம் வந்து, மக்களிடையே, திறந்த வாகனத்தில் ஒரு வலம் வந்த திருத்தந்தை, 'இரக்கமுடைய தந்தை' என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார்.

இந்த சிறப்பு யூபிலி ஆண்டில் இடம்பெறும் மறைக்கல்விப் போதனையில் இன்று, தன்னை விட்டுப் பிரிந்து காணாமற்போன மகனை, எவ்வித முன் நிபந்தனையுமற்ற அன்புடனும் மன்னிப்புடனும்  மீண்டும் ஏற்கும் தந்தை குறித்த இயேசுவின் உவமையை நோக்குவோம். இயேசு நமக்கு இங்கு கற்றுத்தர விரும்புவது என்னவெனில், ‘நம்முடைய சிறப்புத் தகுதியினால் அல்ல, மாறாக, வானகத் தந்தையின் முடிவற்ற அன்பின் வழியாகவே, நாம் இறைவனின் குழந்தைகள் ஆனோம்’ என்பதையே. கடவுளின் மாறாத அன்பையும், எப்போதும் தயாராக இருக்கும் அவரின் மன்னிக்கும் நிலையையும் நாம் அடிக்கடி நினைவுகூர வேண்டியுள்ளது. இல்லையெனில், நாமோ நமக்கு நெருங்கியவர்களோ வழி தவறிச் செல்லும்போது, மனம் தளர்ந்துவிடக் கூடும். தவறிப்போன இளைய மகனைப் பற்றி மட்டுமல்ல, தந்தையின் இரக்கத்தைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய மூத்த மகனைக் குறித்தும் இந்த உவமை எடுத்துரைக்கிறது. தந்தையின் அன்பு இங்கு, தண்டனை, வெகுமதி என்ற எல்லைகளையெல்லாம் தாண்டிச் செல்கிறது. நன்றியறிவிப்பின் விழாவிற்கு அழைப்பு விடுப்பதன் வழியாக, தந்தையானவர், தன் இரு மகன்களும் ஒருவரையொருவர் சகோதரராக ஏற்று, தன் மகிழ்ச்சியை அவர்களும் பகிரும்படி அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பிற்கு மூத்த மகன் எவ்விதம் பதிலளித்தார் என்பது குறித்து கூறாமலேயே நிறைவுறுகிறது இந்த உவமை. இறைவனின், ஒப்புரவாக்கும் அன்பிற்கு நம் இதயங்களைத் திறந்து, தந்தையாம் இறைவனைப் போல் நாமும் இரக்கமுள்ளவர்களாக மாறுவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பிற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்குமாறு நம் ஒவ்வொருவரையும் கேட்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, சீனா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்கு, தன் வாழ்த்துக்களையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.