2016-05-11 16:08:00

திருப்பீடம், நிலப்பரப்பு கொண்ட அரசு அல்ல - கர்தினால் பரோலின்


மே,11,2016. திருப்பீடம் என்பது ஒரு நிலப்பரப்பை உள்ளடக்கிய அரசு அல்ல, மாறாக, புனித பேதுருவின் வழித் தோன்றலாக பணியாற்றும் திருத்தந்தையுடன் தொடர்புடைய ஓர் அம்சம் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இப்புதனன்று வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள், எஸ்டோனியா நாட்டில் கர்தினால் பரோலின் அவர்கள் மேற்கொண்டுள்ள ஒரு பயணத்தில், இப்புதன் மதியம், டார்ட்டு பல்கலைக் கழகத்தில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

திருப்பீடமும், பன்னாட்டு உறவுகளும் என்ற தலைப்பில் தான் உரையாற்றவேண்டுமென பல்கலைக் கழகம் தன்னைக் கேட்டுக்கொண்டது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

திருத்தந்தை, திருப்பீடச் செயலர், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், ஒவ்வொரு நாட்டிலும் பணியாற்றும் திருப்பீடத் தூதரகங்கள் ஆகியவற்றின் வரலாற்றையும், இன்றைய செயல்பாட்டையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் விளக்கிக் கூறினார்.

இரண்டாம் உலகப் போரைப் போல, உலக சமுதாயத்தைப் பாதித்துள்ள பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் திருப்பீடம் அக்கறை கொண்டு, அமைதிக்காகவும், நீதியான சமுதாயத்திற்காகவும் பன்னாட்டு அரசுகளிடம் தொடர்ந்து விண்ணப்பித்து வந்துள்ளது என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வலிமையான புயல் காற்று வீசும்போது, ஒரு மரத்தின் கிளைகள் பெருமளவு பாதிக்கப்பட்டாலும், அதன் வேர்கள் ஆழமாக வேரூன்றியிருந்தால் அந்த மரம் நிலைத்து நிற்கும் என்ற உருவகத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது ஐரோப்பிய சமுதாயத்தைக் குறிப்பதற்கெனப் பயன்படுத்தியதை, கர்தினால் பரோலின் அவர்கள், டார்ட்டு பல்கலைக் கழகத்தில் வழங்கிய உரையில் நினைவுறுத்தினார்.

1632ம் ஆண்டு, மன்னர் Gustavus Adolphus அவர்களால் நிறுவப்பட்ட டார்ட்டு பல்கலைக் கழகத்தின் தன்னிகரற்ற பெருமைகளையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.