2016-05-11 16:01:00

சிரியா மக்களுக்கு, உலக கிறிஸ்தவர்களின் ஆதரவு தேவை


மே,11,2016. கிறிஸ்தவ வரலாற்றின் துவக்கத்திலிருந்து, 'நாசரேத்து மனிதர்கள்' என்ற பெயருடன், சிரியா நாட்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் ஆர்வமாக இருந்தனர் என்று, அலெப்போ பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள் கூறினார்.

மெல்கித்திய வழிபாட்டு முறை பேராயரான Jeanbart அவர்கள், அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது, Knights of Columbus என்ற அமைப்பினருக்கு வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வந்துள்ள சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள், தற்போது சந்தித்து வரும் கொடுமைகளின்போது உலகெங்கும் பரவியுள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவை நாடி நிற்கின்றனர் என்று பேராயர் Jeanbart அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

Knights of Columbus அமைப்பினர், சிரியா மக்களின் உறைவிடம், உணவு, மருத்துவச் செலவு, கல்வி ஆகியவற்றிற்கு 10,500,000 டாலர்கள் நிதி உதவி செய்துள்ளதற்கு, பேராயர் Jeanbart அவர்கள், தன் சிறப்பான நன்றியைக் கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை, இனப் படுகொலைகள் என்று உலக நாடுகள் அறிவிக்கவேண்டும் என்று, அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, அலெப்போ பேராயர் Jeanbart அவர்கள், தன் பாராட்டைத் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.