2016-05-10 15:40:00

மறைப்பணியாளர் தூய ஆவியாரால் தூண்டப்படுகின்றனர்


மே,10,2016. மறைப்பணியாளர்கள் தூய ஆவியாரின் அழைப்புக்குப் பணிந்து நடப்பவர்களாய் இருப்பதால், நற்செய்தியை மிகத் தொலைதூரத்தில் அறிவிப்பதற்குக்கூட, அவர்கள், தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்கு, பற்றியெரியும்  ஆவலால் நிரப்பப்பட வழிநடத்தப்படுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், மறைப்பணியாற்றுவதன் வழியாக, திருஅவைக்குச் சேவை செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகள் பற்றி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பவுலடிகளாரை, மிலேத்துவிலிருந்து எருசலேமுக்குச் செல்வதற்குத் தூய ஆவியார் கட்டாயப்படுத்துவது பற்றிக் கூறும், இச்செவ்வாய் திருப்பலியின் முதல் வாசகத்திலிருந்து தனது மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை.

தூய ஆவியார் தனது வாழ்வின்மீது நிறைவான அதிகாரம் கொண்டுள்ளார் என்பதையும், பிரச்சனைகள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் தன்னை நற்செய்தி அறிவிப்பதற்குத் தூய ஆவியாரே எப்போதும் உந்தித் தள்ளினார் என்பதையும் பவுலடிகளார் ஏற்றார் என்றும் உரைத்த திருத்தந்தை, இதுவே, எல்லாக் காலங்களிலும் மறைப்பணியாளர்களின் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

தனக்காக என்ன காத்திருக்கின்றது என்பதை அறியாமலே, ஒரு மறைப்பணியாளர் எவ்வாறு தனது பயணத்தைத் தொடங்குகிறார் என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பிரான்சிஸ் சவேரியார் பற்றியும் குறிப்பிட்டார்.

இக்கால இளைஞர், இளம்பெண்களிடமும் தன் மறையுரையின் இறுதியில் பேசிய திருத்தந்தை, மறைப்பணியாளர்களை உற்று நோக்குங்கள், தூர இடங்களுக்குச் செல்வதற்கு நம்மைக் கட்டாயப்படுத்தும் தூய ஆவியாரிடம் செபியுங்கள் என்றும் கூறினார்.

மேலும், “இன்றையச் சவால்கள், நம் பயங்களை வெற்றி கண்டு, ஒன்றிப்புக்கும், ஐரோப்பா மற்றும் உலகின் நல்லதோர் எதிர்காலத்தை ஒன்றுசேர்ந்து கட்டுவதற்கும் சக்திகளாக மாறட்டும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.