2016-05-10 16:17:00

ஜோர்டானிலுள்ள புலம்பெயர்ந்தவர்க்கு திருப்பீடம் வேலைவாய்ப்பு


மே,10,2016. ஜோர்டானிலுள்ள ஈராக் நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை, தலைநகர் அம்மானில், திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, மே 12, வருகிற வியாழனன்று ஆரம்பிக்கவுள்ளது.

கோர் ஊனும் அவையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Segundo Tejado Muñoz அவர்கள் தலைமையில் தொடங்கப்படும் இத்திட்டம், 2015ம் ஆண்டில் மிலானில் நடந்த எக்ஸ்போவில், திருப்பீடம் அமைத்திருந்த, அலங்காரக் கூடாரத்தைப் பார்வையிட்ட மக்கள் வழங்கிய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்களைக் கொண்டு செயல்படவுள்ளது.

இந்த நிதி, ஜோர்டானிலுள்ள புலம்பெயர்ந்த ஈராக் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வளர்ச்சித் திட்டத்திற்குச் செலவழிக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

திருப்பீட கலாச்சார அவையின் ஒத்துழைப்புடன், கோர் ஊனும் அவை தொடங்கும் இத்திட்டத்தை, அம்மான் காரித்தாஸ் நிறுவனம் மேற்பார்வையிடும். எண்ணெய் மற்றும் காய்கறிகள் விற்பனை, உற்பத்தி போன்றவை வழியாக 15 ஈராக்கிய புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தொடர்ந்து இத்திட்டம் உதவும். மேலும், 200 புலம்பெயர்ந்தவர்களுக்கு, தச்சுவேலை, வேளாண்மை, உணவுத் தொழில்நுட்பம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் 500 புலம்பெயர்ந்தவர்களுக்கு,  ஆண்டு முழுவதும் தற்காலிக வேலைவாய்ப்பு கொடுக்கப்படும். பின்னர், இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டானில் தற்சமயம், ஏறத்தாழ ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ஈராக்கியர்களும், 13 இலட்சத்திற்கு மேற்பட்ட சிரியா நாட்டினரும், புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.