2016-05-10 15:52:00

காப்டிக் கிறிஸ்தவ சபைத் தலைவருக்கு திருத்தந்தை கடிதம்


மே,10,2016. இன்றைய உலகின் பல சவால்களுக்கு மத்தியில், காப்டிக் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கரும், முக்கியமான விழுமியங்களுக்கு, நற்செய்தியின் அடிப்படையில் சான்று பகர முடியும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

காப்டிக் கிறிஸ்தவர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே நட்புறவு நாள் மே 10, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவ சபைத் தலைவர் 2ம் Tawadros அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

காப்டிக் மற்றும் கத்தோலிக்கருக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நிலவிய மௌனம், புரிந்துகொள்ளாமை, ஏன் பகைமையுணர்வுக்குப் பின்னர், தற்போது, இவ்விரு சபையினரும் உரையாடலில் ஈடுபட்டு, நற்செய்தியை அறிவிப்பதிலும், மனித சமுதாயத்திற்குப் பணியாற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து சிந்தித்து வருவது குறித்த மகிழ்வை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மனித வாழ்வின் தூய்மை மற்றும் மாண்பு, திருமணம் மற்றும் குடும்ப வாழ்வின் புனிதம், இயற்கையை மதித்தல் போன்ற, கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள முக்கியமான விழுமியங்களுக்கு, இவ்விரு சபையினரும் ஒன்றிணைந்து சான்று பகர முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எகிப்திலும், மத்திய கிழக்கிலும், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில், கடும் துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவச் சமூகங்களைத் தினமும் நினைத்து செபிப்பதாகவும், இப்பகுதிகளில் இடம்பெறும் சொல்ல முடியாத வன்முறைகள் முடிவுக்கு வரவும், ஞானமும், நீதியும் நிறைந்த தீர்வு கிடைப்பதற்கு, பன்னாட்டுச் சமூகத்தை இறைவன் தூண்டவேண்டுமெனவும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் திருத்தந்தை 3ம் Shenouda அவர்களும், 43 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக மே 10ம் தேதி சந்தித்தனர்.  

அலெக்சாந்திரியாவின் திருத்தந்தையாகிய 2ம் Tawadros அவர்கள், புனித மார்க் திருஆட்சிப் பீடத்தின் முதுபெரும் தந்தையாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.