2016-05-09 16:11:00

பாலியல் வன்முறை குறித்து இந்திய ஆயர் பேரவை கண்டனம்


மே,09,2016. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், 28 வயது நிறைந்த ஜீஷா (Jisha) என்ற தலித் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு, இந்திய ஆயர் பேரவை தன் வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வாழும் எந்தப் பெண்ணும், அவர் வாழும் இல்லத்திலும் பாதுகாப்பின்றி வாழ்வதை இத்தகைய வன்கொடுமைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன என்று, இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு கூறியுள்ளது.

வழக்கறிஞர் தொழிலுக்கென பயின்று வந்த ஜீஷா என்ற பெண், ஏப்ரல் 28ம் தேதி மாலை, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, 38 இடங்களில் உடலெங்கும் காயப்பட்டதால் மரணமடைந்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்தியச் சமுதாயத்தில், கருவில் தோன்றியது முதல், பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகள், பெரும் அவமானத்தையும், துயரையும் வருவிக்கின்றன என்று, வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை அறக்கட்டளையைச் சேர்ந்த, Pascoal Carvalho என்ற மருத்துவர் ஆசிய செய்தியிடம் கூறினார்.

2012ம் ஆண்டு, டில்லி மாநகரில், ஓடும் பேருந்தில், வன்முறை கும்பலால் பாலியல் கொடுமைகளை மேற்கொண்டு, உடலளவிலும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளான 'நிர்பயா' என்ற பெண்ணின் கொடூர மரணம், நாடு தழுவிய போராட்டங்களைக் கண்டன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.