2016-05-09 14:42:00

இது இரக்கத்தின் காலம் : விண்ணகம் என்பது...


துறவி ஒருவர், தனது மடாலயத்தில் சமையல் அறையில் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவி துடைத்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில், ஒரு வானதூதர் அவர் முன்னால் போய் நின்று, ஆண்டவர் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார், நீங்கள் விண்ணகத்தில் வாழ்வதற்கு நேரம் வந்துவிட்டது என்றார். ஆண்டவருக்கு என் நினைவு வந்ததற்கு நன்றி, நீங்களே பாருங்க, எவ்வளவு பாத்திரங்கள் இன்னும் சுத்தப்படுத்த வேண்டியிருக்கு, நான் நன்றிகெட்டவனா இருக்க விரும்பலே, அதனால, இந்தப் பணியை முடிக்கிற வரைக்கும், எனது விண்ணக வாழ்வைத் தள்ளிப்போட முடியுமா என்று கேட்டார் துறவி. சரி, பிறகு பார்க்கலாம் என்று சொல்லி, வானதூதர் சென்றுவிட்டார். மறுபடியும் ஒருநாள் அத்துறவியிடம் வந்தார் வானதூதர். அப்போது துறவி, தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்தார். அப்போதும் வானதூதர் அதையே சொன்னார். துறவியும், இங்க பாரு, இந்தத் தோட்டம் பாவம், களைகள் மண்டிக்கிடக்கு, அதனால் விண்ணகம் எனக்காகக் கொஞ்ச காலம் பொறுத்திருக்கலாம்ல என்று கேட்டார். அதுவும் சரி என்று வானதூதர் மறைந்துவிட்டார். மீண்டும் ஒருநாள் வானதூதர் வந்தபோது, துறவியார், மருத்துவமனையில் நோயாளிகளைக் கவனிக்கிற வேலையில் ஈடுபட்டிருந்தார். அந்நேரமும் வானதூதர் முன்புபோல் சொல்லிச் சென்றுவிட்டார். அன்று மாலை துறவியார் தனது அறைக்குச் சென்று, ஒவ்வொரு நேரமும் வானதூதரை இப்படி அனுப்பி வைக்கிறோமே என்று சிந்தித்தார். தனக்கு வயதாவதையும், சோர்வாக இருப்பதையும் உணர்ந்தார். ஆண்டவரே, உம் தூதரை மறுபடியும் அனுப்பும், நான் விண்ணகம் வரத்  தயாராக உள்ளேன் என்று கண்மூடிச் செபித்தார் துறவி. பின்னர் கண்ணைத் திறந்தபோது அதே வானதூதர் தனது முன்னால் நிற்பதைக் கண்டார் அவர். பின்னர் தூதர் அன்போடு பேசினார் – துறவியாரே, நீங்க இந்நாள் வரைக்கும் வேற எங்கே இருந்ததா நினைக்கிறீங்க என்று.

ஆம். விண்ணகம் என்பது, தன்னலமற்ற சேவையில், பிறருக்குத் தொண்டு புரிவதில் அமைகின்றது.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.