2016-05-09 16:04:00

அனைத்து தரப்பினர் மத்தியிலும் வாழ்வு சாட்சிகளாக செயல்படுவோம்


மே,09,2016. விண்ணகத்திற்கு எழுந்து செல்லும் முன்னர், தன் சீடர்களை நோக்கி, ‘நீங்கள் என் சாட்சிகள்’ என இயேசு கூறிய வார்த்தைகள், அவரின் மரணம் மற்றும் உயிர்ப்பின் சாட்சிகளாக அவர்கள் விளங்க வேண்டும் என்பதை உணர்த்தும் அழைப்பாக இருந்தது என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு விண்ணகத்திற்கு எழுந்து சென்றதைக் கண்ட சீடர்கள், உடனே நகர்களுக்குச் சென்று, உயிர்த்த இயேசுவிலிருந்து கிட்டும் புதிய வாழ்வு குறித்து எடுத்துரைத்தனர் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் அவர்கள், அனைத்து நாடுகளுக்கும், பாவத்திற்காக மனம் வருந்துதல் மற்றும் மன்னிப்பு குறித்து எடுத்துரைத்தனர் என மேலும் கூறினார்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் இந்த சாட்சியத்தை, நாம், வார்த்தைகளால் அல்ல, மாறாக வாழ்வால் வெளிப்படுத்த வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாரம் முழுவதும், நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், நாம் கூடும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும், சிறைகளிலும், முதியோர் இல்லங்களிலும், குடிபெயர்ந்தோர் கூடுமிடங்களிலும் என, அனைத்து இடங்களிலும் இந்த சாட்சிய வாழ்வு வாழப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்து நம்மோடு உள்ளார், அவர் வானகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அவர் உயிரோடு உள்ளார் என்ற சாட்சியம் ஒவ்வொரு வாரமும் நம்மால் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, உலகில் சிறப்பிக்கப்பட்ட அன்னை தினம் குறித்தும் எடுத்துரைத்து, பாசத்தோடும், நன்றியுணர்வோடும், அனைத்து அன்னையர்களையும் இன்று நினைவுகூர்வோம் எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.